உன்னாவ் பலாத்கார வழக்கில் பாஜக மாஜி எம்எல்ஏவின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.. ஜாமீனில் விடுதலை
டெல்லி: நாட்டையே உலுக்கிய உன்னாவ் 17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் உத்தர பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்தது. அதோடு அவரை ஜாமீனில் விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் சிங் செங்கார். இவர் கடந்த 2007 ம் ஆண்டில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உன்னாவ் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சார்பில் 2007 ல் பங்கார்மாவு தொகுதியிலும், பிறகு 2012ம் ஆண்டில் பகவந்த் நகர் தொகுதியிலும் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

பிறகு பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் 2017 ம் ஆண்டில் பங்கார்மாவு தொகுதியில் போட்டியிட்டு 4வது முறையாக எம்எல்ஏவானார். இந்நிலையில் தான் குல்தீப் சிங் செங்கார் மீது பலாத்கார புகார் எழுந்தது. அதாவது 17 வயது சிறுமி அவரிடம் வேலை கேட்டு கடந்த 2017 ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி சென்றார்.
அப்போது குல்தீப் சிங் செங்கார் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. மேலும் சிறுமியின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இறந்தார். அதிலும் குல்தீப் சிங் செங்காரின் சதி இருப்பதாக கூறப்படுகிறது. 2018 ல் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. பாஜகவில் இருந்து குல்தீப் சிங் செங்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் கடந்த 2019 ஜூலை 28 ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் காரில் சென்றனர். அப்போது லாரி மோதியது. இதில் சிறுமியின் உறவுக்கார 2 பெண்கள் பலியாகினர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் காயத்துடன் உயிர் பிழைத்தனர். 2019 ஆகஸ்ட் 1ம் தேதி வழக்கு விசாரணை அனைத்தும் உத்தர பிரதேச நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு 2019 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. குல்தீப் சிங் செங்கார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் தனக்கான தண்டனையை எதிர்த்து குல்தீப் சிங் செங்கார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத் மற்றும் நீதிபதி ஹரீஸ் வைத்தியநாதன் சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குல்தீப் சிங் செங்காருக்கான ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்த வேளையில் சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது. அதன்படி குல்தீப் சிங் செங்கார் 3 பேரின் உத்தரவாதத்துடன் ரூ.15 லட்சம் பணம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் இடத்தை சுற்றிய 5 கிலோமீட்டருக்குள் நுழைய கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டக்கூடாது. பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணிக்கு லோக்கல் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை டெல்லியில் வசிக்க வேண்டும். ஒருவேளை அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தண்டனையின் மீதமுள்ள பகுதியை சிறையில் கழிக்க வேண்டும்'' என்று கூறியது.












Click it and Unblock the Notifications