சம்பல் தடை: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் உரிமையை பறித்துவிட்ட உ.பி பாஜக அரசு-ராகுல் கடும் அட்டாக்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் வன்முறைகள் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்ய தமக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான உரிமையை பறிப்பதாகும் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தமக்கான இந்த உரிமையை மறுத்திருப்பதன் மூலம் அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தையே முடிவுக்கு கொண்டு வருகின்றனர் எனவும் ராகுல் காந்தி சாடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் மசூதி ஒன்று சர்ச்சைக்குரியதானது. இந்த மசூதியை கோவிலை இடித்து கட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட அப்பகுதியே பெரும் வன்முறைக் காடாக மாறியது. போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பலரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சம்பல் பகுதியை பார்வையிடுவதற்காக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்க்ரஸ் எம்பி பிரியங்கா காந்தியுடன் சென்றார். ஆனால் உ.பி. எல்லையான டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தியை உ.பி. போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்பகுதியில் ஒன்றரை மணிநேரம் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அடுத்த சில நாட்களில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவர் என உறுதி அளிக்கப்பட்டதால் அனைவரும் டெல்லி திரும்பினர்.
அப்போது பொதுமக்களிடையே அரசியல் சாசனத்தை கைகளில் ஏந்தியபடி ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் சம்பாலுக்கு செல்ல முயற்சிக்கிறோம், போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அங்கு செல்வது எனது உரிமை, ஆனால் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள். நான் தனியாக செல்லத் தயார், நான் போலீசார்டனும் செல்லத் தயார். ஆனால், அவர்கள் அதையும் ஏற்கவில்லை.
இது எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைகளுக்கு எதிரானது, நாங்கள் சம்பாலுக்குச் செல்ல விரும்புகிறோம். அங்கு என்ன நடந்தது என்று பார்க்க விரும்புகிறோம். நாங்கள் மக்களை சந்திக்க விரும்புகிறோம், நமது அரசியலமைப்பு உரிமை மறுக்கப்படுகிறது. இதுவே புதிய இந்தியா... இதுவே அம்பேத்கரின் அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவரும் இந்தியா. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர், அவருக்கான அரசியலமைப்பு உரிமைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. அவரைத் தடுக்க முடியாது. உத்திரபிரதேச போலீசாருடன் நான் தனியாக செல்வேன் என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால் அதற்கும் போலீசார் தயாராக இல்லை. இந்தக் கேள்விகளுக்கு போலீஸாரிடம் பதில் இல்லை. உ.பி.யில் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கை சிறப்பாகக் கையாண்டதாக பா.ஜ.க ஏன் பெருமையுடன் சொல்கிறது? இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications