உப்புமாவை வீழ்த்த வேண்டும்.. நாடாளுமன்றத்தில் எம்பி திருச்சி சிவா சொன்ன கதை.. மிரண்டு பார்த்த பாஜக
டெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களை வைத்து உள்ளது. இந்த நிலையில் அதானி மீதான புகார்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து உள்ளன. இன்று நாடாளுமன்ற அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் சில நிமிடங்கள் முடங்கியது.
அதானி பங்கு சரி ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அமளிக்கு பின் அவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா உப்புமா கதை ஒன்றை குறிப்பிட்டு பாஜகவை விமர்சனம் செய்தார்.

உப்புமா
அவர் தனது பேச்சில், ஒரு கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தினமும் உப்புமா போடுகிறார்கள். உடனே மாணவர்கள் எல்லாம் கொதித்து போய் வார்டனிடம் முறையிடுகிறார்கள், எங்களுக்கு தினமும் உப்புமா வேண்டாம் என்று முறையிடுகிறார்கள். உடனே வார்டன்.. சரி ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். நான் ஒரு லிஸ்ட் போடுகிறேன். அந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்தமான பொருட்களுக்கு வாக்களியுங்கள். அதில் வெற்றிபெறும் பொருளை தேர்வு செய்யலாம். அந்த பொருளை ஹாஸ்டலில் கொடுக்க சொல்கிறேன் என்று கூறுகிறார்.

வாக்கெடுப்பு
இதையடுத்து வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் 7 சதவிகிதம் மாணவர்கள் பிரெட் மற்றும் ஆம்லெட் வழங்க வாக்களிக்கிறார். 13 சதவிகிதம் பூரி வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் ஆளு பரோட்டா வழங்க கோரிக்கை வைக்கிறார்கள். 19 சதவிகிதம் மசாலா தோசை வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். 20 பேர் இட்லி வேண்டும் என்று கேட்கிறார்கள். 23 சதவிகிதம் பேர் உப்புமா வேண்டும் என்று மீண்டும் வாக்களிக்கிறார்கள். இதனால் உப்புமா ஜெயித்துவிடுகிறது. அதனால் மீண்டும் உப்புமாவை போடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள் என்று திருச்சி சிவா கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்த கதையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். என்ன சொல்ல வருகிறார் என்பது போல கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். மாநிலங்களவை சபாநாயகர் தன்கரும் இதை உற்று கவனித்துக்கொண்டு இருந்தார். உப்புமா கதை என்றதும் சிலர் சிரித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, இது போலத்தான்.. உப்புமா வென்றது போலத்தான் 2019ல் பாஜகவும் வென்றது. மாணவர்கள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் உப்புமா வென்றது போல எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பாஜக வென்றது.

தேர்தல்
அது அடுத்த தேர்தலில் நடக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். அது நடக்க வேண்டும். அப்போதுதான் பாஜக வெல்வதை தடுக்க முடியும். நாங்கள் கை கோர்த்து வருகிறோம். இந்த ஆட்சி மூலம் நடந்தது எல்லாம் போதும். மக்கள் பட்ட கஷ்டங்கள் போது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது போதும். சமூக நீதிக்கு எதிரான இந்த ஆட்சி போதும். மத உரிமைகளுக்கு எதிரான இந்த ஆட்சி போதும்.

சமஸ்கிருதம்
தமிழுக்கு எதுவும் செய்யாமல் இவர்கள் இல்லாத சமஸ்கிருதம் மொழிக்காக உழைக்கிறார்கள். அதற்கு பணம் கொடுக்கிறார்கள். மாநில உரிமைகளை இவர்கள் முற்றாக குழி தோண்டி புதைத்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்சி போதும். இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது. இதோடு இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முடிவு கட்டும், என்று திருச்சி சிவா பேசினார். உப்புமா கதையை எடுத்துக்காட்டாக கூறி அவர் பாஜக ஆட்சியை விமர்சனம் செய்தது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications