அமெரிக்கா சீன வர்த்தக போரால் இந்தியாவுக்கு லாபம்.. அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்! ஆஹா செம
டெல்லி: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். இந்த வர்த்தகப் போரால் உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்த வர்த்தகப் போரால் சத்தமே இல்லாமல் இந்தியாவுக்கு லாபமாக மாறியுள்ளது.. இருவருக்கும் இடையேயான வர்த்தகப் போரில் இந்தியாவுக்குக் கிடைத்த லாபம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இருப்பினும், ஒரே வாரத்தில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரெசிப்ரோக்கல் வரியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரியை மட்டும் அதிகரிப்பதாக அறிவித்தார்.

அமெரிக்கா சீனா வர்த்தகப் போர்
அதன் பிறகு சீனா பதிலடி கொடுக்க... அமெரிக்க மீண்டும் வரியை அதிகரிக்க.. இதே மாறி மாறி சென்று கொண்டு இருந்தது. இப்போது சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 245% இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 100%க்கு மேல் இறக்குமதி வரியை விதித்துள்ளன. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை விதித்து வருவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தியா சீனா இடையேயான வர்த்தகப் போரில் இந்தியாவுக்கு இப்போது செம லக் அடித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கு லாபம்
அதாவது உலகில் இரண்டே இரண்டு முன்னணி விமான நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதில் போயிங் அமெரிக்காவைச் சேர்ந்தது. வரிப் போர் காரணமாக போயிங் நிறுவனத்தின் விமானங்களை வாங்க வேண்டாம் எனத் தனது நிறுவனங்களுக்குச் சீனா உத்தரவிட்டது. அப்போது 10 விமானங்கள் சீனாவுக்கு வரத் தயாராக இருந்த நிலையில், அது கேன்சல் செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே சீனாவுக்கு வந்த சில 737 மேக்ஸ் வகை விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
இதற்கிடையே சீன விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட இந்த போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு இதில் லக் அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

ஏர் இந்தியா ஆர்வம் காட்டுவது ஏன்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியாவுக்கு இப்போது அவசரமாக விமானங்கள் தேவைப்படுகிறது. நாம் டிவி, பிரிட்ஜ் வாங்குவது போல சும்மா கடைக்குப் போய் விமானங்களை ஆர்டர் போட்டுவிட முடியாது. சர்வதேச அளவில் போயிங் மற்றும் ஏர் பஸ் நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆர்டர் போட்டு மாதக் கணக்கில் காத்திருந்தால் மட்டுமே விமானங்கள் கிடைக்கும். ஆனால், இப்போது சீன நிறுவனங்கள் போயிங் விமானங்களை வாங்க மறுக்கும் நிலையில், அவை ஈஸியாக ஏர் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
ஏர் இந்தியா நிறுவனம் இகு தொடர்பாக போயிங்கை அணுகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 10 விமானங்கள் + 737 மேக்ஸ் மட்டுமின்றி சீனாவுக்காகத் தயாராகி வந்த மற்ற பல ஜெட் விமானங்களையும் வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக போயிங்கை அணுகவும் திட்டமிட்டு வருகிறது. மேலும், வரும் காலத்தில் சீன நிறுவனங்களுக்காக உற்பத்தி செய்ய ஒதுக்கப்பட்ட ஸ்லாட்களையும் கோரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது முதல்முறை இல்லை
சீன நிறுவனங்களின் முடிவால் இதுபோல ஏர் இந்தியா பயன் அடைவது இது முதல்முறை இல்லை.. கடந்த மார்ச் வரை, இதற்கு முன்பும் சில காரணங்களுக்காகச் சீன நிறுவனம் வேண்டாம் எனச் சொன்ன 41 விமானங்களை (737 மேக்ஸ்) ஏர் இந்தியா வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ஏர் இந்தியா திட்டமிட்டு வருவது உறுதி என்றே நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.
ஏர் இந்தியா மட்டுமின்றி மலேசியாவை சேர்ந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சீனாவுக்காக உற்பத்தி செய்யப்பட்ட விமானங்களை வாங்க போயிங்கை தொடர்பு கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போயிங் இந்த இரு நிறுவனங்களில் ஒன்றுக்கு விமானத்தை ஒதுக்கலாம். அல்லது பகுதியாகப் பிரித்து இரண்டிற்கும் விமானங்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கலும் இருக்கு
விமானம் என்பது சிக்கலான ஒன்று. கார், பைக் போல கையில் வந்தால் சரி என இருக்க முடியாது.. ஏற்கனவே உருவாக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்டு வரும் போயிங் விமானங்களை வேறு ஒருவர் வாங்குவது சிக்கல்களை ஏற்படுத்தும். அதாவது இப்போது சீன நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டதை ஏர் இந்தியா வாங்குவது, ஏர் இந்தியாவுக்குச் சிக்கல் தான்.
ஏனென்றால் கேபின் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை சீட் இருக்க வேண்டும் என அனைத்துமே சீன நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரெடி செய்து இருக்கும். அவர்கள் சீன மார்க்கெட்டை கருத்தில் கொண்டு தேவையான விஷயங்களைக் கோரிக்கை விடுத்திருப்பார்கள். அது இந்தியாவுக்கு செட் ஆகாமல் கூடப் போகலாம். எனவே, அதை ஏர் இந்தியா வாங்குவது சிக்கல் தான்.
காரணம் இதுதான்
இந்தப் பிரச்சினை இருக்கும்போது ஏன் ஏர் இந்தியா அவசரமாக விமானங்களை வாங்குகிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்தியச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதே அதற்குப் பிரதானக் காரணம். அதாவது நமது நாட்டில் இப்போது இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா மட்டுமே களத்தில் உள்ளன. இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் உண்மையில் இண்டிகோ கைதான் இப்போது ஓங்கி இருக்கிறது.
இண்டிகோவை சமாளிக்க ஏர் இந்தியா கடந்த 2023ம் ஆண்டிலேயே 140 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், அவற்றின் டெலிவரிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தான் தொடங்கும். இந்தியாவில் விமான போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தக் கால தாமதம் ஏர் இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும். இந்திய மார்க்கெட்டில் ஏர் இந்தியாவுக்கு பின்னடைவாகவும் அமையும். இதன் காரணமாகவே கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஏர் இந்தியா விமானத்தை வாங்கி வருகிறது.
ஏர் இந்தியா திட்டம் என்ன
இதுபோல இதர நிறுவனங்களுக்காகத் தயாரிக்கப்படும் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா, அதை பெங்களூரில் ரீபெயிண்ட் அடித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பயன்படுத்தவுள்ளது. இண்டிகோ நிறுவனம் குறைந்த ரேட்டில் விமான டிக்கெட்களை விற்பனை செய்யும் நிலையில், அதற்கு நேர் போட்டியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இயக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications