இந்தியர்களின் 2000 விசா மனுக்களை நிராகரித்த அமெரிக்க தூதரகம்! ஷாக் காரணம்!
வாஷிங்டன்: அமெரிக்க தூதரகம் இந்தியாவில் 2,000-க்கும் அதிகமான விசா மனுக்களை நிராகரித்திருக்கிறது. மோசடி காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே இந்தியா மீது வரியை விதிக்கப்போகிறோம் என டிரம்ப் பயமுறுத்தி வரும் நிலையில், இந்த விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மக்கள் இரண்டு காரணங்களுக்காக அதிகமாக செல்கின்றனர். ஒன்று வேலை. இரண்டாவது சுற்றுலா. இரண்டுக்கும் B1 மற்றும் B2 விசாக்கள் வழங்கப்படுகிறது. விசாவை பெற நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஆனால் இந்த தேர்வுக்காக காத்திருக்கும் நாட்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. முன்னாடியெல்லாம் 100-200 நாட்களில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவோம். ஆனால் இப்போது 800-1000 நாட்கள் வரை ஆகிறது என அமெரிக்காவுக்கு செல்வோர் புலம்புகின்றனர்.
இதற்கு காரணம் பாட் (bots) எனப்படும் தானியங்கி சாப்ட்வேர்தான். விசாவுக்கான நேர்முகத்தேர்வுகள் தொடர்பான தேதி அமெரிக்க தூதரக இணையதளத்தில் வெளியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதில் போய் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் குறைவான தேதியில் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், பாட் சாப்ட்வேர் தூதரகத்தின் வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்து, தேதி வெளியாவதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு சட்டென தேதியை புக் செய்துவிடும்.
புக் செய்யப்பட்ட தேதி ஏஜென்ட்டுகள் மூலம் வெளியில் விற்பனை செய்யப்படும். இதை வைத்து சாதாரணமாக நேர்முகத்தேர்வுக்கு வசூலிக்கப்படும் தொகையை விட பல மடங்கு அதிக பணத்தை ஏஜென்ட்டுகள் வசூலிக்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பாட் முறையில் அதிக அளவு விண்ணப்பங்கள் குவிந்ததால், இந்திய விண்ணப்பதாரர்களுக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மற்றும் தாய்லாந்தின் பாங்காக் ஆகிய நகரங்களில் நேர்முகத்தேர்வு செய்யும் வசதியை அமெரிக்கா ஏற்படுத்தியிருந்தது.
எனவேதான் இந்த விஷயத்திற்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தற்போது பாட் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட 2000 இந்தியர்களின் விசா நேர்முகத்தேர்வுக்கான மனுக்களை அமெரிக்க தூதரகம் நிராகரித்திருக்கிறது. இது மோசடியான முறை என்று குறிப்பிட்டுள்ள தூதரம், இது போன்ற விஷயங்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபும் இந்திய மாணவர்களுக்கான விசாவை அமெரிக்கா அதிக அளவில் புறக்கணித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் (அக்டோபர் 2023 - செப்டம்பர் 2024), அமெரிக்கா 6.79 லட்சம் மாணவர் விசா (F-1 Visa) விண்ணப்பங்களைப் பெற்றது. அதில், 2.79 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டை விட 2023-2024 விசா நிராகரிப்பு 41% ஆக அதிகரித்திருக்கிறது.
ஆண்டு வாரியாக பார்த்தால் 2014ல் வெறும் 15% விசாக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. ஆனால் 2022-2023ல் 36% ஆகவும், 2023-2024ல் 41% ஆகவும் விசா நிராகரிப்பு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் 2024 முதல் ஒப்பிடும்போது 38% குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications