மூலப்பொருள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை.. தடுப்பூசி உற்பத்தி பாதிப்பு... உண்மையை உடைத்த ஆதர் பூனவல்லா
டெல்லி: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் 1.26 லட்சமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி பஞ்சாம் ஆகிய மாநிலங்களில் இரவு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை விரைவில் அனுப்பி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்றுமதிக்குத் தடை
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா இந்தியா டுடே நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப்பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. இது கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்குச் சென்று இதற்காக நானே போராட்டம் நடத்த வேண்டும் என்று எனக்கும் ஆசைதான்.ஆனால், இதற்கான தீர்வை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

கடும் பாதிப்பு
இந்தத் தடையால் இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நமக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இப்போது நமக்கு அந்த மூலப்பொருட்கள் தேவைதான். ஆறு மாதங்கள் கழித்தும் நிலை இப்படி இருக்காது. ஏனென்றால் அந்தச் சமயம் நாங்கள் மற்ற இடங்களில் இருந்து மூலப்பொருட்களைத் தயார் செய்துவிடுவோம்.

சீனாவில் இருந்து இறக்குமதிசீனாவில் இருந்து இறக்குமதி
தற்போதுவரை சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. ஏனென்றால் சீன மூலப்பொருட்களில் தரம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. தற்போது சீரம் நிறுவனத்தில் மாதம்தோறும் 6.5 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை வகும் ஜூன் மாதத்திற்குள் 11 கோடியாக அதிகரிக்கவுள்ளோம்.

இந்தியர்களுக்கு முக்கியத்துவம்
தற்போது கொரோனா தடுப்பூசியின் விலை குறித்தும் மத்திய அரசுடன் ஆலோசித்தோம். இதே விலைக்கு அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு எங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீரம் தடுப்பூசி
உலகில் மிகப் பெரிய மருந்த உற்பத்தி செய்யும் நிறுவனமான சீரம் நிறுவனம் உள்ளது. ஆக்ஸ்போராட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications