அமெரிக்கா வரி விதிப்பு! அடி வாங்கும் 4 தொழில்கள்! இந்தியாவுக்கு பதில் எந்தெந்த நாடுகள் பலனடையும்?
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததால் எந்தெந்த நாடுகள் லாபம் அடையும் என்பதை பார்க்கலாம். இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் ஆடை உற்பத்தி, கடல் உணவு ஏற்றுமதி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இதையே நம்பி வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரில் இந்தியா ரஷ்யாவை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி, இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் ரூ 4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் இந்தியாவில் உள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உள்ளது. அமெரிக்காவில் பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியாவுக்கு பிரச்சினை இருந்தால் அந்த வாய்ப்பை ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி அதே பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் சூழல் உள்ளது.
அமெரிக்கா விதிக்கும் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் இந்தியாவின் 4 முக்கியமான துறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். மேலும் இந்த துறைகள் மூலம் வேறு எந்தெந்த நாடுகள் பலனடையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஜவுளி துறை
அமெரிக்க வரிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜவுளி, ஆடைகள் துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் ரூ 90 ஆயிரம் கோடிக்கும் மேலான ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். இந்தியாவுக்கு பதிலாக வியட்நாம், வங்கதேசம், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஆடை ஏற்றுமதியை செய்து பயனடைய வாய்ப்புகள் உள்ளன.
தங்க நகை
அது போல் நகைகள், ரத்தினங்கள் விற்பனையும் பின்னடைவைச் சந்திக்கக் கூடும். இதனால் ரூ 85 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை உள்ளது. வைர ஏற்றுமதியில் மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த வைர தொழில், சூரத்,மும்பை போன்ற நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே இத்தாலி, பிரான்ஸ், தாய்லாந்து, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து பலனடையும்.
ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் துறை மீதும் 50 சதவீத வரி விதிப்பால் இது இந்தியாவுக்கு பெருத்த அடியாக உள்ளது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ 58 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பை மெக்சிகோ பயன்படுத்திக் கொள்ளும். அது போல் ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனியும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து பலனடையும்.
இறால் ஏற்றுமதி
கடல் உணவு ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். குறிப்பாக இறால் ஏற்றுமதி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் ரூ 20 ஆயிரம் கோடி வரை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இறால், கடல் உணவு ஏற்றுமதியில் ஆந்திரா, தமிழகம் போன்ற கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களது வேலைக்கு பங்கம் வந்துவிடும். இதனால் ஈக்வடார், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் பலனடையும். இந்தியா மாற்று ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே ஏற்றுமதி தொழில் பாதிக்காமல் இருக்கும். அதையே நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்காது.












Click it and Unblock the Notifications