ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது உறுதி! நாளை டெல்லி வருகிறார் ஜோ பைடன்
டெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை டெல்லி வருகிறார். வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதி செய்திருக்கிறது.
இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட புதின், இந்த மாநாட்டில் தான் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஜி20 நாடுகளின் பட்டியலில் உள்ள மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்த சூழலில்தான் புதின் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இதனைத் தொடர்ந்து சீன அதிபரும் இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங்குக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் தலைமையில் சீனக்குழு பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரண்டு பெரிய முக்கியமான நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்த மாநாட்டில் பங்கேற்பது கேள்விக்குறியானது. ஏனெனில் அவரது மனைவி ஜில் பைடனுக்கு கோரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மொத்தமாக குறைந்திருந்தாலும், அமெரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் பாதிக்கிறது என்பதால் அமெரிக்காவில் மீண்டும் அச்சம் மேலெழுந்திருக்கிறது. இப்படியாக ஜில் பைடனும் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஜோ பைடனுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்த நிலையில், தற்போது அவர் டெல்லி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications