டிரம்ப் - மோடி நட்பு.. அமெரிக்காவுடன் மீண்டும் இணக்கமாகும் இந்தியா? ஜெய்சங்கர் பதிலை கவனிச்சீங்களா
டெல்லி: டிரம்பின் வரி விதிப்பால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. சீனாவுடன் நம் நாடு உறவை புதுப்பித்துள்ளார். இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையே தான் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். மோடி எனது நண்பர். இந்தியா - அமெரிக்கா உறவு பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இந்தியா - அமெரிக்கா உறவு இயல்பு நிலைக்கு செல்கிறதா? என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அசை்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சவீத வரியை விதித்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவை நம்பியது போதும் என்ற முடிவுக்கு வந்தது. அதேபோல் சீனாவையும், டிரம்ப் குறிவைத்து வருகிறார். இதனால் நம் நாடும், சீனாவும் பகையை மறந்து டிரம்பால் ஒன்று சேர்ந்துள்ளன.

சீனா - இந்தியா எப்படியும் ஒன்று சேராது. இதனால் இந்தியாவை பணிய வைத்து விடலாம் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
‛ஐஸ்’ வைக்கும் டிரம்ப்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் தனித்தனியாக சந்தித்தார். மேலும் உச்சி மாநாட்டில் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்தனர். இது டிரம்பால் ஏற்க முடியவில்லை.
மேலும் இந்தியா, சீனாவுடன் கைகோர்த்து இருப்பதை அவரால் சகிக்கமுடியவில்லை. இதனால் நம் நாட்டை விமர்சனம் செய்து வந்த டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி இப்போது ‛ஐஸ்' வைக்க தொடங்கி உள்ளார்.
டிரம்ப் சொன்னது என்ன?
அதன்படி டிரம்ப், ‛‛இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டதாக தெரிகிறது'' என வலைதளத்தில் பதிவிட்டார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், ‛‛நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.
இருப்பினும், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்'' என்றார்.
மோடியின் ரியாக்சன் என்ன?
இதற்கு பிரதமர் மோடி , ‛‛நம்முடைய உறவுகள் குறித்த அதிபர் டிரம்பின் உணர்வுகள் மற்றும் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன். இதனை முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்கத்துடன் கூடிய விரிவான நல்லுறவை கொண்டுள்ளது'' என்றார்.
டிரம்ப் மற்றும் மோடியின் இந்த கருத்துகளால் இருநாடுகளும் மீண்டும் நட்பாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெய்சங்கர் தந்த பதில்
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை நண்பர் என டிரம்ப் அழைத்தது, டிரம்பின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி கொடுத்த பதில் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் கூறுகையில், "அமெரிக்காவுடனான நமது நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார். அவர் (பிரதமர் மோடி) எப்போதும் அதிபர் டிரம்புடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வைத்துள்ளார். ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. இதை மட்டுமே என்னால் கூற முடியும்'' என்றார்.












Click it and Unblock the Notifications