அஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிளிங்கன் இந்தியா வருவது இது முதல்முறையாகும்.
இந்தியா வந்துள்ள ஆண்டனி பிளிங்கன், தலைநகர் டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு, பொருளாதாரம்
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும், இந்திய-அமெரிக்க உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த இருவரும் உறுதி பூண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆப்கன் விவகாரம், சீனா ஆதிக்கம்
ஆப்கானிஸ்தானில் ராணுவ படைக்கும்-தலீபான் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள போர், பசிபிக் பெருங் கடல் பிராந்தியத்தில் ஆதிக்க செலுத்த முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் குறித்து முக்கியமாக பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான சமகால மற்றும் எதிர்கால பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பரிமாறிக் கொண்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மிக்க மகிழ்ச்சி
இந்த சந்திப்பு பின்னர் டுவிட்டரில் பதிவிட்ட ஆண்டனி பிளிங்கன், '' இன்று இந்திய பாதுகாப்புத்துறை தலைவர்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அமெரிக்காவும் இந்தியாவும் ஜனநாயக விழுமியங்களுக்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன; இது எங்கள் உறவின் அடிப்பகுதியின் ஒரு பகுதியாகும், இது இந்தியாவின் பன்மைத்துவ சமுதாயத்தையும், நல்லிணக்க வரலாற்றையும் பிரதிபலிக்கிறது' என்று கூறி இருக்கிறார்.

3-வது உயர் அதிகாரி
இதேபோல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு பைடன் அரசு நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரியின் மூன்றாவது பயணம் இதுவாகும். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இதேபோல் அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications