இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர்! ரெடியான அஜித் தோவல்! மோடி உடன் சந்திப்பு.. என்ன நடக்கிறது?
டெல்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஏப்ரல் 21 முதல் 24 வரை இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா ஆகியோர் இந்தியா வர உள்ளனர்.
இதற்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர், அவரது மனைவி உஷா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளான இவான், விவேக் மற்றும் மிராபெல் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு பாலம் விமான தளத்தில் தரையிறங்க உள்ளனர். டெல்லிக்கு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்வார்கள், மேலும் பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களை விற்கும் வணிக வளாகங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி உடன் சந்திப்பு
இன்று மாலை 6:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் மோடி வரவேற்கிறார். இன்று மாலையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியக் குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் இந்த சந்திப்பில் இடம் பெற உள்ளனர்.
முக்கிய வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி கடந்த மாதம் முதல் அமலில் உள்ளது. இதனால் இந்தியாவிற்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன.
சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரலாம்.
இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம். டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள். ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.
ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனைகள் இன்று துணை அதிபர் வான்ஸ் - பிரதமர் மோடி இடையே இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications