நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை நாளை முதல் அமல்படுத்துகிறது உத்தரகாண்ட்!
டெல்லி: நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை நாளை முதல் அமல்படுத்துகிறது உத்தரகாண்ட். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வருகை தருவதற்கு முன்னதாக இந்த சட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதும் ஒன்றாகும்.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம், விவாகரத்து, வாரிசு விவகாரம் மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்டவைகளில் மதங்கள் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் நாடு முழுவதும் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது.

2002-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை கடந்த ஆண்டு மாநில சட்டசபையில் நிறைவேற்றியது.
இதனையடுத்து இந்த பொது சிவில் சட்டம் நாளை முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி இது தொடர்பாக கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 28-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வருகை வருகிறார். அவரது வருகைக்கு முன்னதாக பொது சிவில் சட்டம் மாநிலத்தில் நடைமுறைக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையதளம் ஜனவரி 27-ந் தேதி பகல் 12.30 மணிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் தொடங்கி வைக்கப்படும் என்றார். நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலம்தான் பொது சிவில் சட்டத்தை முதல் முறையாக அமல்படுத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications