வங்கிகளில் நகைக்கடன் புதுப்பிப்பு.. ஆர்பிஐ தனது முடிவை திரும்ப பெறுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை
டெல்லி : வங்கிகளில் நகைக்கடன் புதுப்பித்தலில் புதிய முறையை திரும்ப பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்பி பேசினார். ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய அறிவிப்பில், நகைக்கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளை பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறுஅடமானம் வைக்க முடியும். இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
நகைக்கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளை பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறுஅடமானம் வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி போட்ட உத்தரவு காரணமாக பல ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அண்மையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்திருந்தார். வைகோ எம்பியும் இதுபற்றி தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.

நகை அடகு
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நேற்று, நேரமில்லா நேரத்தின் போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்பி பேசுகையில், "பொதுமக்கள் தங்களுடைய அவசர பணத் தேவைகளுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து நகைக் கடன்களை பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் அடகு கடைகளிலோ அல்லது கமிஷன் முகவரிடமோ நகையை அடமானம் வைத்தால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ரிசர்வ் வங்கி புதிய விதி
குறைந்த வட்டியில் கிடைப்பதாலும், பாதுகாப்பு காரணமாகவும் இவர்கள் வங்கிகளில் இருந்து நகைக்கடன்களை பொதுமக்கள் பெறுகிறார்கள். பொதுமக்கள் கடந்த ஆண்டு வரை நகைக்கடன் காலத்தின் முடிவில், வட்டியை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து வந்தனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது
மறுஅடமானம்
புதிய அறிவிப்பில், நகைக்கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளை பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறுஅடமானம் வைக்க முடியும். இது ஏழை மக்கள், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. வட்டி மட்டும் செலுத்தி நகைக்கடனை புதுப்பிக்கும் முறை பயனுள்ளதாக இருந்தது.
புதிய வழிகாட்டுதல்
ரிசர்வ் வங்கி மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் சூழலை உருவாக்க விரும்புகிறது என்பதையும், அதன் காரணமாகத்தான் இந்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் நன்கு புரிந்து கொள்கிறேன். ஆனால் இது "குழந்தையை குளியல் நீரோடு வீசுவது" போன்றதாக இருக்கிறது. அதாவது தேவையில்லாத ஒன்றை நீக்குவதாக நினைத்து பயனுள்ள ஒன்றையும் அகற்றி விடுகிறோம்.
வைகோ வலியுறுத்தல்
எனவே நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்ய வேண்டும் என நிதி அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ எம்பி நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார்.












Click it and Unblock the Notifications