உள் இடஒதுக்கீட்டு- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாரத் பந்த்- பகுஜன் சமாஜ் கட்சி, விசிக ஆதரவு!
டெல்லி: தலித், பழங்குடிகளில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அடையாளம் கண்டு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அண்மையில் வரலாற்றுச் சிறமிக்கத் தீர்ப்பு அளித்தது. அதே நேரத்தில் தலித், பழங்குடிகள் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் அடிப்படையில்- கிரிமீலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்- முழு அடைப்புப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் தலித் இடஒதுக்கீட்டில் அருந்ததியர் ஜாதியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து அண்மையில் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் ஒன்று, தலித் - பழங்குடிகளில் மிகவும் பாதிக்கப்பட்ட ஜாதியினரை கண்டறிந்து அவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் ; இதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதாகும். இதனை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்கின்றன.
அதேநேரத்தில் தலித்- பழங்குடிகள் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல்- கிரிமீலேயர் முறையை அமல்படுத்த வேண்டும்; அதாவது தலித்- பழங்குடிகளில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும்; இதற்கான கொள்கைகளையும் மாநில அரசு வகுக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உள் இடஒதுக்கீடு தீர்ப்புக்கு பெரும்பாலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான தலித் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக பீகார்,மேற்கு வங்கம், ஒடிஷா ஜார்க்கண்ட் மாநிலங்களில் வலிமையாக உள்ள தலித் அமைப்புகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள இந்த பாரத் பந்த் போராட்டம் பீகாரில் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தலித் அமைப்புகளின் இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசிக பொதுச்செயலாளரும் எம்பியுமான ரவிக்குமார், "உச்சநீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பைக் கண்டித்தும், அதை ரத்துசெய்யும் விதமாக சட்டம் இயற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தலித் அமைப்புகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. பந்த் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications