“நான் ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வழக்கு விசாரணை நடக்கணும்னு நினைக்கிறீங்களா?” தலைமை நீதிபதி காட்டம்!
டெல்லி: "நான் ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வழக்கின் விசாரணை நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நேரடியாகச் சொல்லிவிடுங்கள்" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மத்திய அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். இன்று அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைக்கக் கோரிய நிலையில் தலைமை நீதிபதி காட்டமாகப் பேசியுள்ளார்.
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம், 2021-ஐ எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, தலைமை நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜராகாத மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மீது தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இன்று ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டிய அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வேறு ஒரு முக்கிய வேலையில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்" என இன்று கோரிக்கை வைத்தார்.
அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஒரு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் பங்கேற்றுள்ளதால், இந்த முக்கிய வழக்கில் ஆஜராக அவகாசம் கோரியதாக ஐஸ்வர்யா பாட்டி தெரிவித்தார். ஆனால், தலைமை நீதிபதி கவாய், இந்த வழக்கின் ஆவணங்களைப் படிப்பதற்கு நீதிபதிகள் நேரத்தைச் செலவிட்டுள்ளதைக் குறிப்பிட்டு, waaன் ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், "நீதிமன்றத்தில் இப்படிக் கோருவது நியாயமல்ல. நான் வரும் நவம்பர் 24 ஆம் தேதி ஓய்வு பெறுகிறேன். அதற்கு பின்தான் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? அப்படி எதுவும் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறி விடுங்கள்.
நாங்கள் அட்டர்னி ஜெனரலுக்கு ஏற்கெனவே இரண்டு முறை அவகாசம் அளித்துள்ளோம். வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்போது இதை விசாரித்து முடிப்பது, எப்போது தீர்ப்பு எழுதி முடிப்பது? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. " என அதிருப்தியுடன் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பும், இந்த வழக்கை எனது அமர்வில் இருந்து மாற்றி, பெரிய அமர்வுக்கு அனுப்பும்படி அட்டர்னி ஜெனரல் விடுத்த கோரிக்கையும் ஒரு தந்திரம் தானா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, அதில் எந்த தந்திரமும் அல்ல என்று விளக்கம் அளித்தார்
இன்றும் ஒத்திவைப்பு கோரிக்கை வந்தபோது, தலைமை நீதிபதி கவாய், "இந்த வழக்கை முடிப்பதற்காக நீதிமன்றம் நாளை (நவம்பர் 7) வேறு எந்த வழக்கையும் பட்டியலிடவில்லை. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களைத் தீர்ப்பு எழுதுவதற்குப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம். இனி எப்போது தீர்ப்பை எழுதுவது? இந்த வாரமும் தீர்ப்பு எழுத முடியாது போலிருக்கிறதே" என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications