டிரைவருக்கு திடீர் மாரடைப்பு.. சாலையை உடைத்துக் கொண்டு தொப்பென விழுந்த பஸ்.. சிசிடிவி வீடியோ
டெல்லி: டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையில், டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதிகளில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து மீரட் வரை அதிவிரைவு நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை மற்ற எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் விட அகலமானது. மிக அதிவேகத்தில் செல்ல முடியும்.

இந்நிலையில் காசியாபாத் அருகே உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று மீரட்டில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணித்த 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.சிலருக்கு கை, கால்களில எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே ஓடிவந்து உதவி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். தகவல் அறிந்து வந்த காசியாபாத் மாவட்ட போலீசார், காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி வெளியாகி உள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு நிகழ்ந்ததை சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன. 25 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சியில், பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இடதுபக்கமாக சாலைக்கு குறுக்காக வருகிறது.
பின்னால் வரும் வாகனங்கள் எதன் மீதும் மோதாமல், நேரடியாக சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு, சாலையை கடந்து காட்டுப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications