அப்துல் கலாம் டூ முகமது ஷமி டூ சானியா மிர்சா.. வக்பு மசோதாவில் பாஜக எம்பி சொன்ன முக்கிய தகவல்
டெல்லி: இஸ்லாமியர்களின் அடையாளமாக ஏபிஜே அப்துல் கலாம் இருக்கிறார். நம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட் எடுக்கும்போது மொத்த நாடும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. டென்னிஸில் சானியா மிர்சா இந்தியாவை பெருமையடைய செய்தவர். அவரை அனைவரும் கொண்டாடி வருகிறோம். இந்த நாடு இந்துக்களை போல் இஸ்லாமியர்களுக்கும் சொந்தமானது என்று வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் பேசினார்.
நாடாளுமன்றத்தில் இன்று வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே இன்று நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா என்பது தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்து பேசினார். அப்போது ஏழை இஸ்லாமியர்களின் வாழ்வை மேம்படுத்தும் அம்சங்களுடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த மசோதா விவாதத்தில் பேசினர். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ரவி சங்கர் பிரசாத் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தமானது போலவே இஸ்லாமியர்களுக்கும் சொந்தம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
ஆனால் இஸ்லாமிய மக்களுக்கான லட்சியம், அடையாளத்தை யார் தருவது? இன்னும் இஸ்லாமியர்களை ஓட்டு வங்கியாக தான் பார்க்கும் நிலை உள்ளது. இது தொடரும் பட்சத்தில் அதனை நம் நாடு ஏற்காது. இஸ்லாமியர்களின் லட்சிய அடையாளமாக மவுலானா அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், அஷ்பக்உல்லா கான், ரக்ஷன், கபீர் மாலிக் முகமது ஜெயசி இருக்கின்றனர்.
நம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட் எடுக்கும்போது மொத்த நாடும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. டென்னிஸில் சானியா மிர்சா இந்தியாவை பெருமையடைய செய்தவர். அவரை அனைவரும் கொண்டாடி வருகிறோம். இஸ்லாமியர்களை ஓட்டுக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இது மாற்றப்பட வேண்டும். வக்ஃபு சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல'' என்றார்.
இதன்மூலம் இஸ்லாமியர்களை வெறும் ஓட்டு வங்கியாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்ப்பதாகவும், இஸ்லாமியர்களுக்காக வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications