குடிநீர் குழாய் பிரச்சனை: மத்திய இணை அமைச்சரின் குடும்பத்தினரிடையே துப்பாக்கி சண்டை- ஒருவர் பலி!
டெல்லி: பீகார் மாநிலத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் குடும்பத்தினரிடையே குடிநீர் குழாய் தொடர்பான சண்டைக்காக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே உள்ள ஜக்த்பூரில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் உறவினர்கள் வசித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் உறவினர்களான ஜெய் ஜித் யாதவ், விஸ்வஜித் யாதவ் ஆகியோரிடையே குடிநீர் குழாய் தொடர்பாக ஒரு பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து மோதலானது.

அப்போது ஜெய் ஜித் யாதவ், விஸ்வஜித் யாதவ் இருவருமே துப்பாக்கியால் சரமாரியாக மாறி மாறி சுட்டுக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இந்த மோதலில் நித்யானந்த ராயின் உறவினர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜகத்பூர் கிராமத்தில் காலை 7.30 மணிக்கு இந்த துப்பாக்கிச் சண்டை நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்ற போது ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்; மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் குடிநீர் குழாய் ஒன்றை மையமாக வைத்துதான் இந்த பிரச்சனை வெடித்திருக்கிறது. மேலும் இருவருமே மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் உறவினர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications