"மிஸ் யூ சார்!" பிரிவு உபசரிப்பு விழாவில் திருச்சி சிவா நெகிழ்ச்சி! கண்கலங்கிய வெங்கையா நாயுடு
டெல்லி: துணை குடியரசுத் தலைவருக்கு இன்று பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்ற நிலையில், இதில் திருச்சி சிவா மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
நமது நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலைவராகக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் வெங்கையா நாயுடு. 73 வயதான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.
புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த வாரம் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளரான ஜெகதீப் தன்கர் அடுத்த குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரிவு உபசரிப்பு விழா
73 வயதான குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. வெங்கையா நாயுடு கட்சிகளைத் தாண்டி, மாற்றுக்கட்சியினர் மத்தியிலும் நன்மதிப்பைக் கொண்டவர். இன்று அவரது பிரிவு உபசரிப்பு விழாவில் மாற்றுக் கட்சியினர் ஆற்றிய உரையை அவர் எந்தளவுக்கு மாற்றுக் கட்சியினரிடமும் நன்மதிப்பைக் கொண்டிருந்தார் என்பதற்குச் சாட்சியாகும்.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் பேசுகையில், "அவையில் வெங்கையா நாயுடுவிடம் இருந்து அதிகம் திட்டுவாங்கிய நபர் நானாகத் தான் இருப்பேன். ஆனால், சபைக்குள் வெளியே அவரிடம் இருந்து அதிகபட்ச அன்பையும் வழிகாட்டுதல்களையும் பெற்ற நபராக நான் தான் இருப்பேன். எங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எதுவும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, உங்கள் சேவைக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

திருச்சி சிவா
அப்போது பேசிய திமுக ராஜ்ய சபா உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளித்த வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். எப்போதும் பிராந்திய மொழிகளுக்காகக் குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்ட திருச்சி சிவா, அவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர் என்று வெங்கையா நாயுடுவுக்குப் புகழாரம் சூட்டினார்.

மிஸ் யூ சார்
தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "நீங்கள் அவையின் உறுப்பினர்கள் மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டு இருந்தீர்கள் என எங்களுக்குத் தெரியும். உறுப்பினர்களின் சிறு சிறு குறைகளைக் கூட நீங்கள் காது கொடுத்துக் கெட்டீர்கள். இந்த சபைக்கு உங்கள் பங்களிப்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் உங்கள் சுயசரிதையைக் கண்டிப்பாக எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக, நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நாங்கள் உங்களை நிச்சயம் மிஸ் செய்வோம் சார்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

கண் கலங்கினார்
மத்திய பாஜக அரசை மிக கடுமையாக எதிர்த்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையனும் வெங்கையா நாயுடுவை புகழ்ந்தே பேசினார். டெரெக் ஓ பிரையன் தனது உரையைத் தொடங்கும் போது வெங்கையா நாயுடுவுக்கு ஒரு வயதாக இருந்தபோது இறந்து போன அவரது தாயார் குறித்து குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் வெங்கையா நாயுடு கண்கலங்கினார்.

பிரதமர் மோடி
முன்னதாக அவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்! இந்த சபையை (மாநிலங்களவையை) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நீங்கள் தற்போது ஓய்வு பெறலாம். ஆனால் இந்த நாடு மற்றும் நாட்டுக்காகப் பொதுவாழ்வில் பணியாற்றும் எங்களைப்போன்றோர்களை உங்கள் அனுபவங்கள் வழிநடத்தும். அதிலிருந்து நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications