மெகா கோடீஸ்வரர்.. ரூ.5,785 கோடி சொத்து.. மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் பெம்மசானி சந்திரசேகர்!
டெல்லி: பாஜக கூட்டணி அரசில் மத்திய இணை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார். மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ள சந்திரசேகர், முதல் முறையாக எம்.பியாகி இருக்கும் நிலையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்று உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கற்றுள்ளார். இன்று மாலை பிரதமராக மோடி பதவியேற்றார். அவருடன் மத்திய கேபினட் அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதால் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் அதிக இடங்களில் வென்றுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் அமைச்சரவையில் முக்கிய இடங்களைக் கேட்டுள்ளனர். அவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி உட்பட, தலா 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மக்களவை துணை சபாநாயகர் பதவியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் சார்பில் மத்திய அமைச்சர்கள்: இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். டாக்டர் சந்திரசேகர் மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகிய இருவரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர். ராம்மோகன் நாயுடுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. டாக்டர் சந்திரசேகருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய இணை அமைச்சராக டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் பதவியேற்றுக் கொண்டார்.
யார் இந்த சந்திரசேகர்?: முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் கண்ட டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் குண்டூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். சந்திரசேகர் கோடீஸ்வர எம்.பி.க்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.5,785 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறியிருந்தார்.
மருத்துவரான பெம்மசானி சந்திரசேகர், ஆந்திர மாநிலம் புரிபாலத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். மருத்துவர் ஆகும் கணவும் நுழைவுத்தேர்வு எழுதி நாட்டில் 27வது ரேங்க் பெற்று எம்.பி.பி.எஸ் படித்தார். 1999-ல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பையும், 2005-ல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பையும் முடித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
வெளிநாடுகளில்: UWorld எனும் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிறுவனத்தை தொடங்கினார் சந்திரசேகர். இந்த நிறுவனம் தற்போது ஏராளமான மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் கனவுகளை நனவாக்கும் முக்கியமான கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

சந்திரசேகரின் தந்தை சாம்பசிவராவ், முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மீது அன்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் நரசராவ்பேட்டை நகர துணைத் தலைவராக பணியாற்றினார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களிலேயே சந்திரசேகர் தெலுங்கு தேசம் கட்சியில் நரசராவ்பேட்டை மக்களவை சீட்டைப் பெற முயன்றார்.
எனினும், மூத்த தலைவர் ராயபதி சாம்பசிவ ராவுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் சந்திரசேகருக்கு சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 3,44,695 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் சந்திரசேகர்.
ரூ. 5,785 கோடி சொத்து: குண்டூர் மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள சந்திரசேகர், வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பிரமாண பத்திரத்தின்படி, தனக்கு மொத்தம் ரூ.5,785.28 கோடி குடும்பச் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் பணக்கார வேட்பாளராக இருந்தார் சந்திரசேகர்.
சந்திரசேகரின் பிரமாண பத்திரத்தின்படி, அவரது பெயரில் ரூ. 2,448.72 கோடி அளவுக்கும், அவரது மனைவிக்கு ரூ.2,343.78 கோடி அளவிலும், பிள்ளைகளின் பெயரில் ரூ.1,000 கோடி அளவுக்கும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ், டெஸ்லா போன்ற சொகுசு கார்களையும் இவர் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் தனக்கு முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தனது குடும்பத்துக்கு அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியில் ரூ.1,138 கோடி கடன் இருப்பதாகவும் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications