எல்லோரும் மாப்பிள்ளை தான்.. விருந்தினர்கள் யாரும் இல்லை.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கலாய்க்கும் பாஜக
டெல்லி: பீகாரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திருமணம் ஊர்வலம் போன்றது என்றும், இதில் அனைவருமே மாப்பிள்ளைதான்.. விருந்தினர்கள் யாரும் இல்லை என்று பாஜக கேலி செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே பாக்கி இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கி முழு வீச்சில் அக்கட்சி செயல்பட தொடங்கியுள்ளது.

பாஜகவின் இந்த வியூகத்தை தவிடு பொடியாக்கி ஆட்சியை பிடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவந்தார். இதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது எனவும் ஏற்கனவே நிதிஷ் குமார் கண்டிப்பு காட்டியிருந்தார். அந்த வகையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சரத்பவார் என தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை வீழ்த்தும் வகையில், 400 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனவும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தை பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடிகூறுகையில், " இது கல்யாண ஊர்வலம் போன்றது.
அனைவருமே மாப்பிள்ளைகள்தான். விருந்தினர்கள் யாரும் கிடையாது. நிதிஷ்குமார் ஏற்பாடு செய்து இருக்க்கும் இந்தக் கூட்டத்தில் அனைவருமே தங்களை போட்டியாளாராக முன்னிறுத்திக் கொள்ள முனைவது போல தெரிகிறது. ஒவ்வொருவரும் தங்கள் நிபந்தனைகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கெஜ்ரிவால் மிரட்டியுள்ளார். சில உடன்பாடு எட்டப்படவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications