தலைக்கேறிய போதை.. 70 வயது பெண் என கூட பாராமல் விமானத்திலேயே.. ‛ச்சீச்சீ’ சம்பவம்.. பறிபோன வேலை
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 70 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் அவர் பணியாற்றி வந்த வெல்ஸ் பார்கோ நிறுவனம் சங்கர் மிஸ்ராவுக்கு அதிரடியாக தண்டனை வழங்கி அவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி வந்தது. இந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்தனர்.
இந்த விமானம் பத்திரமாக இந்தியா வந்திறங்கியது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பத்திரமாக சென்றனர்.

பெண் மீது சிறுநீர் கழித்த நபர்
இந்நிலையில் தான் அன்றைய தினம் விமானத்தில் 70 வயது பெண் பயணம் செய்த நிலையில் அவர் மீது குடிபோதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விமான நிறுவனத்துக்கு புகார் அளித்த நிலையில் தான் இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இருப்பினும் கூட விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளானது.

மும்பையை சேர்ந்தவர்
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பதும், அவர் 34 வயது நிரம்பியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் "வெல்ஸ் பார்கோ " எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர் மிஸ்ராவை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.

தலைமறைவு- லுக் அவுட் நோட்டீஸ்
அதன்பிறகு சம்பவம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்த சங்கர் மிஸ்ரா தலைமைறவானர். இதற்கிடையே சங்கர் மிஸ்ராவின் போட்டோவை போலீசார் வெளியிட்டனர். மேலும் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்லாமல் இருக்க போலீசார் சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருந்து நீக்கம்
இந்நிலையில் போதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் சங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் அமெரிக்காவின் ‛வெல்ஸ் பார்கோ' எனும் அமெரிக்க நிறுவனத்தின் கவனத்துக்கு சென்றது. இந்நிலையில் தான் சங்கர் மிஸ்ராவை பணியில் இருந்து அதிரடியாக அந்த நிறுவனம் நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ‛‛எங்கள் நிறுவன ஊழியர்கள் தொழில்முறையாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல நடத்தையை கொண்டுள்ளனர். ஆனால் சங்கர் மிஸ்ராவின் செயல் அநாகரீகமானது. அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கின்றன. இது அவமானமானது. இந்த நபர் வெல்ஸ் பார்கோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத நிலையில் பணி நீக்கம்
இந்நிலையில் தான் விரைவில் சங்கர் மிஸ்ரா கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, சம்பவம் தொடர்பாக சங்கர் மிஸ்ரா அந்த பெண்ணிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் இணைக்கப்பட்ட கடிதத்தில் அந்த விபரம் கூறப்பட்டுள்ளது. அதில், ‛‛சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய விமான சிப்பந்திகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார் என்றனர். மேலும் அந்த நபர் என் முன்னே வந்து, என்னை மன்னித்துவிடுங்கள். போலீஸில் புகார் அளித்து விடாதீர்கள். நான் குடும்பஸ்தன். இந்த சம்பவத்தால் எனது மனைவியும் மகனும் பாதித்துவிடக் கூடாது எனக் கூறி கதறி அழுதார்'' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் சங்கர் மிஸ்ராவின் வேலை பறிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications