வருமான வரியில் மாற்றம்.. தங்கம், வெள்ளி & சிகரெட்டுக்கு வரி உயர்வு.. A டூ Z பட்ஜெட் அறிவிப்புகள்
2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லி: மத்திய நிசியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு முதல் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு வரை இடம்பெற்றிருந்த அனைத்து முக்கிய விஷயங்களையும் பார்க்கலாம்.
மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
மேலும், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், மோடி 2.o அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்பவே இந்த பட்ஜெட் ஓரளவு அமைந்தது என்று சொல்லலாம்.

நிர்மலா சீதாராமன்
2019ஆம் ஆண்டு முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 5ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். பட்ஜெட்டிற்கு முன்பு அரசு சாதனைகளைப் பட்டியலிடுவது வழக்கம்.. இந்த முறை அது தொடர்பான கருத்துகளைச் சுருக்கமாகவே வைத்திருந்தார் நிர்மலா சீதாராமன். கடந்த சில ஆண்டுகளாகப் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெற்றிருந்தது. இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, வளங்களைப் பயன்படுத்துதல், வேளான் வளர்ச்சி என ஏழு முக்கிய அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒளிமயமான எதிர்காலம்
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது.. இந்தியா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது.. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக உலகமே அங்கீகரித்துள்ளது.. உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்" என்று சொல்லி அவர் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யாரும் பட்டினியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரம்
தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச அளவில் பல்வேறு சவால்கள் உள்ள இந்த நேரத்தில் இந்தியா ஜி20 தலைமையை ஏற்றுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.. 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் சிறப்பாக முன்னேறியுள்ளது. சர்வதேச அளவில் 10ஆம் இடத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் இப்போது 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்த 2014 முதல் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் என்பது 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்..

157 நர்சிங் கல்லூரிகள்
நாடு முழுக்க 2014க்கு பிறகு 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்" என்று அவர் அறிவித்தார். கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் கோடி கடன் தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லாக் கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் என்று அவர் அறிவித்தார். உள்கட்டமைப்பு , வளர்ச்சி உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டின் முக்கிய இலக்குகள் என்று கூறிய நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்பில் பல துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

50 விமான நிலையங்கள்
மத்திய அரசு பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ரயில்வே துறைக்கு ₹ 2,40,000 கோடி ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹ 79,000 கோடியும் கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹ 10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். நாடு முழுக்க கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அவர், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு சென்டர்கள் நிறுவப்படும் என்றும் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்தி இயற்கை உரங்கள் பயன்படுத்த ஊக்குவிப்போம் என்றும் அவர் அறிவித்தார். இது மட்டுமின்றி குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பெண் சேமிப்பு திட்டம்
நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ₹10,000 கோடியும் போக்குவரத்துத் துறைக்கு ₹75,000 கோடியும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், நாட்டில் இப்போது 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாடு முழுக்க இருக்கும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்றார். மேலும், பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்க ₹10,000 கோடி முதலீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார். "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டுப் பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். பெண்களுக்கு ₹2 லட்சம் வரை 7.5% வட்டி விகிதத்தில் சேமிக்க புதிய சேமிப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

விலை குறையும்
அதேபோல உள்நாட்டில் மொமைல் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதி சுங்கவரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அதேபோல டிவி பேனல் இறக்குமதி வரியும் குறைக்கப்படுகிறது. இதனால் மொபைல், டிவி விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பேட்டரி வாகனங்களின் விலையும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பட்ஜெட்டில் சிகரெட்டுகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என குறிப்பிட்ட நிதியமைச்சர், 2025-26 நிதியாண்டுக்குள், நிதிப் பற்றாக்குறை விகிதத்தை 4.5%க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

விலை அதிகரிக்கும்
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஏற்கனவே தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், இப்போது சுங்க வரி அதிகப்பட்டுள்ளது தங்க நகை விலையை மேலும் உயர்த்தும். அதேநேரம் டிஜிட்டல் தங்கத்தில் மூலதன ஆதாயமோ, வரியோ இருக்காது என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதேநேரம் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரத்தின் சுங்க வரி குறைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

வருமான வரி
மேலும், வருமான வரித் தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். கடைசியாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.

வருமான வரி குறையும்
கடந்த 2020இல் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 6 வரம்புகள் இருந்தன. இப்போது அது 5 வரம்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை.. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி செலுத்த வேண்டும் (தகுந்த ஆவணங்களைக் காட்டி வரி விலக்கு பெற முடியும்) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை இருந்தால் 10% வரி செலுத்த வேண்டும். ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15% வரியும் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20% வரியும் செலுத்த வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications