மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரெடியா? என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் தெரியுமா? இதோ விவரம்
டெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற உள்ளதாகவும், இந்த கணக்கெடுப்பு பணி 2026ம் ஆண்டில் முடிவடையும் என்றும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக கடந்த 2011ம் ஆண்டில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நடந்தது.

அதன்பிறகு 2021ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் இருந்ததால் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து தாமதப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் நம் நாட்டில் அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி என்பது 2026ம் ஆண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
இதற்கிடையே தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மொத்தம் 31 கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்படியே இப்போதும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளது. பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த தேதி, வாழும் கிராமம், திருமணம் ஆனதா?, குழந்தைகள் எத்தனை?, மதம் என்ன? வீட்டின் தலைவர் பெண்ணா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி தொலைபேசி - செல்போன் வசதி உள்ளதா? இணையதள வசதி உள்ளதா? சைக்கிள், பைக் அல்லது ஸ்கூட்டர், சொந்தமாக கார் உள்ளதா? குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி , வீட்டு சமையலறை, சமையல் எரிவாயு சிலிண்டர், டிவி வசதி உள்ளதா?, பட்டியலினத்தை சேர்ந்தவரா? பிற சமுதாயத்தை சேர்ந்தவரா? என்பது போன்ற கேள்விகளும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது பல சமுதாயங்களை சேர்ந்தவர்கள் தனிமத அங்கீகாரம் கோரி வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கர்நாடகா முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவின் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தனி மதஅங்கீகாரம் கோரி வருகின்றனர். தற்போது அவர்கள் இந்து மதத்தின் கீழ் வரும் நிலையில் தனிமதம் கேட்கின்றனர். அதேபோல் ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் சிலர் தனிமத அங்கீகாரம் கேட்கின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மொத்தம் 6 மதங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், ஜெயின் உள்ளிட்ட மதங்கள் மட்டும் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பாக இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனாலும் கூட கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2,650 சாதிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2025ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதால் அதற்கு பிறகு 2035, 2045, 2055 என்ற ஆண்டுகளில் அடுத்தடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications