"வாழக் கூடிய நகரங்கள்.." டாப் இடத்தில் ஐரோப்பிய நகரங்கள்..சென்னை நிலை மோசம்.. அப்போ பெங்களூர் எங்கே
டெல்லி: உலகில் மிக வாழக்கூடிய நகரங்கள் என்ற பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஐரோப்பிய மற்றும் கனடா நாட்டினை சேர்ந்த நகரங்கள் அதிகம் டாப் 10இல் வந்துள்ளன. இதில் சென்னை, பெங்களூர் உட்பட இந்திய நகரங்கள் எங்கே உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் நகரமயமாக்கல் படுவேகமாக நடந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளும் கூட நகரங்களைச் சுற்றியே அமைகிறது. இதனால் கிராமங்களில் இருக்கும் பொதுமக்களும் கூட வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கியே நகர்கிறார்கள்.

இதனால் நகரங்கள் மேலும் மேலும் ஜனநெருக்கடி மிகுந்த ஒன்றாக மாறிவருகிறது. இதற்கிடையே சர்வதேச அளவில் மிகவும் வாழக்கூடிய நகரங்கள் என்ற பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
வாழக்கூடிய நகரங்கள்: எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் இணை அமைப்பான தி எகனாமிஸ்ட் வெளியிட்ட இந்தப் பட்டியலின்படி, 2023ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வாழக்கூடிய நகரமாக ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா இருக்கிறது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகளை வைத்து இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இதில் மொத்தம் 173 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தான் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டும் அது இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களும் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் கனடா நாட்டில் இருந்தே அதிகபட்சமாக 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. கனடாவின் கால்கரி, வான்கூவர் மற்றும் டொராண்டோ ஆகிய நகரங்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளன. அதேபோல சுவிஸ் நாட்டின் சூரிச் ஆறாவது இடத்தையும், ஜெனீவா ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய நகரங்கள்: இந்தியாவைப் பொறுத்தவரை 5 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பெங்களூர், அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி மற்றும் மும்பை என இரு நகரங்களும் 141வது இடத்தில் உள்ளன. சென்னை 144வது இடத்திலும் உள்ள நிலையில் அகமதாபாத் 147ஆவது இடத்திலும் மற்றும் பெங்களூரு 148வது இடத்திலும் உள்ளன.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவது ஒட்டுமொத்தமாக 2023 ஆம் ஆண்டில் வாழ்வாதாரத்திற்கு நல்லது.. ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வளரும் பொருளாதாரங்களில் உள்ள நகரங்களில் நன்கு முன்னேறியுள்ளது. கொரோனா முடிவுக்கு வந்ததால் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் அழுத்தம் குறைந்துள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி உறுதி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் 12 இடங்கள் சரிந்து 46ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் 22 இடங்கள் சரிந்து 43வது இடத்தில் உள்ளது.
மோசமான நகரங்கள்: உக்ரைன் தலைநகர் கீவ், வங்கதேச தலைநகர் டாக்கா ஆகியவையும் கடைசி 10 இடங்களில் இருக்கிறது. அதேபோல சிரியாவின் டமாஸ்கஸ் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இதில் கடைசி இடத்தில் இருக்கிறது. இத்துடன் பாகிஸ்தானின் கராச்சி, நைஜீரியாவின் லாகோஸ், அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ், லிபியாவின் திரிபோலி ஆகிய நகரங்களும் மிக மோசமான 5 நகரங்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications