அந்த பிரஷர்! அவசரமாக விசாரித்த பாஜக "மேலிடம்".. நுபுர் சர்மா நீக்கப்பட்டது எப்படி? பரபரப்பு பின்னணி
டெல்லி: இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பாஜகவில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். பாஜக இப்படி ஒரு முடிவை எடுக்கும் என்று அதன் தொண்டர்களே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் பாஜகவின் இந்த திடீர் முடிவிற்கு பின் என்ன நடந்தது? எதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பாஜக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Recommended Video
முதலில் நுபுர் சர்மா நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும்,. அதை அவர் மறுத்து, சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட பார்த்தார். நான் பேசியதை எடிட் செய்துவிட்டார்கள் என்று கூறி சமாளிக்க பார்த்தார். ஆனால் இந்த விவகாரம் அதன்பின்தான் பெரிதானது.
நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உண்மைதான் என்று உறுதியானதும், அந்த குறிப்பிட்ட வீடியோ, அந்த சேனலில் இருந்தே நீக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சனை அடங்கவில்லை.

அரபு நாடுகள் எதிர்ப்பு
இதையடுத்து அரபு நாடுகள் பல நுபுர் சர்மா கமெண்டை எதிர்த்தன. அதோடு உத்தர பிரதேசத்தில் நுபுர் சர்மாவிற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்தே நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நவீன் குமார் ஜிண்டலை நீக்குவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின் என்ன நடந்தது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலிடத்தில் நடந்த கூட்டம்
அதன்படி, நுபுர் சர்மா கருத்து அரபு நாடுகளில் சர்ச்சையானதும், பாஜக மேலிடம் கூடி இதை பற்றி ஆலோசனை செய்துள்ளதாம். அதாவது கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இந்த விவகாரம் பெரிதாகிறதே.. என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர். அதில்.. இருவரின் கருத்தும் இந்தியாவின் இமேஜை பாதிக்கும் வகையில் இருப்பதாக முக்கிய தலைவர்கள், அரசுக்கான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். எல்லோருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் 'sabka saath, sabka vikas'. கோஷத்திற்கு எதிராக இவர்களின் பேச்சு இருப்பதாகவும் அந்த ஆலோசனையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலிடம் அப்செட்
மற்ற விஷயங்களில் இஸ்லாமியர்களை எதிர்ப்பு வேறு.. ஆனால் இஸ்லாமியரின் இறை தூதுவரை எதிர்ப்பது என்பது தவறு.. அது உள்நாட்டு விவகாரம் அல்ல.. அது சர்வதேச விவகாரம், என்று பாஜக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறதாம். அதோடு பாஜக ஆட்சிக்கு வந்து 8ம் ஆண்டு கொண்டாட்டத்தை அக்கட்சி சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் தேவையில்லாத சர்ச்சையை இவர்கள் ஏற்படுத்தியதை பாஜக தலைமை விரும்பவில்லையாம். அதோடு ஜிண்டால் ஏற்கனவே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போதே இவரை தலைமை தட்டி வைத்துள்ளது. இப்போது மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், தலைமை அப்செட்டில் இருக்கிறதாம். இதெல்லாம் போக நுபுர் சர்மா தனக்கு பாஜக உயர் மட்ட தலைகள் நேரடியாக ஆதரவு தருவதாக மீடியா ஒன்றில் கூறியதையும், தலைமை விரும்பவில்லையாம்.

இமேஜ் அரபு நாடுகள்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கத்தான் கத்தாரில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு இதில் விளக்கம் கேட்டு கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது. ஈரான், குவைத், சவுதி போன்ற நாடுகளும் இதில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. நேரடியாக சம்மன் அனுப்பும் முன்பே வாய் மொழியாக கடும் அழுத்தங்களை இந்த நாடுகள் கொடுத்துள்ளன. அதிலும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தாரில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அரபு நாடுகள் எதிர்ப்பு
அவரின் முதல் கத்தார் பயணம் இது. இந்த பயணத்தில் கத்தார் துணை அதிபர் உடனான அவரின் மதிய உணவும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மருத்துவ பிரச்சனை என்று காரணம் சொல்லப்பட்டாலும், இந்தியாவிற்கு அந்நாட்டு அரசு கொடுத்த மறைமுக அழுத்தமாவே பார்க்கப்பட்டது. கத்தார் போன்ற அரபு நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், இது போன்ற மோதல்கள் இந்திய பொருளாதாரத்தைதான் பாதிக்கும். இதனால்தான் நுபுர் சர்மா கருத்தை பாஜக மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

பாஜக பதில்
இதன் காரணமாகவே டேமேஜ் கண்ட்ரோல் செய்யும் விதமாக, பாஜக சார்பாக மத ஒற்றுமை குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தியாவின் பல்லாயிர வருட வரலாற்றில், இந்தியாவில் பல்வேறு மதங்கள் வளர்ந்து இருக்கின்றன, தோன்றி இருக்கின்றன. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது, என்று பாஜக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

அமெரிக்கா எதிர்ப்பு
சமீபத்தில் உலக நாடுகளில் மத சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டது. அதில், இந்தியாவில் மதம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்து வருகிறது. மைனாரிட்டிகள் மீதான தாக்குதல்கள், கொலைகள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளியான அதே வாரத்தில் நுபுர் சர்மாவின் பேச்சு சர்வதேச அளவில் சர்ச்சையாகி இருக்கிறது.

ஆர்எஸ்எஸ் கருத்து
அதேபோல் ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்? நாம் தினமும் ஒரு புதிய பிரச்னையை எழுப்பக் கூடாது என்று சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பாஜகவை சாடும் வகையில் பேசி இருந்தார். இப்படி அனைத்து பக்கங்களிலும் இருந்து அழுத்தம் வந்த நிலையில்தான் டெல்லியில் முக்கிய பாஜக தலைகள் ஆலோசனை செய்து நுபுர் சர்மாவை நீக்கியதாக கூறப்படுகிறது. மத ரீதியாக overboard போக வேண்டாம் என்று பாஜக நிர்வாகிகள் சிலர் அறிவுறுத்தி உள்ளனர். நுபுர் சர்மாவை நீக்கியதன் மூலம் இந்தியா மீதான நம்பிக்கையை நிலைநாட்ட முடியும் என்று மத்திய அரசு நினைப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications