வெங்கையா நாயுடு கத்தாரில் இருக்கும் போதே.. "லாக்" வைத்த "ஷேக்".. விருந்தும் கேன்சல்.. பரபர சம்பவம்
டெல்லி: இஸ்லாமிய வெறுப்பு காரணமாக இந்தியாவை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தாரில் மேற்கொள்ள இருந்த முக்கியமான மீட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகளை கடுமையாக விமர்சனம் செய்து நுபுர் சர்மா பேசினார்.
இந்த வீடியோ உலகம் முழுக்க வைரலான நிலையில், கத்தார், குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
Recommended Video

கடும் விமர்சனம்
இந்த நாடுகளின் விமர்சனங்களை தொடர்ந்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் நபிகளுக்கு எதிராக ட்விட் செய்த நவீன் மிட்டல் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு, இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. இவை கழகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது. ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.

கடும் மோதல்
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கத்தார் சென்று இருந்த நேரம் பார்த்து இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று வெங்கையா நாயுடு கத்தார் அதிபரின் தந்தை ஷேக் ஹமாத் பின் கலீபா அல் தானியுடன் சந்திப்பு நடத்தினார். அதன்பின் பிரதமர் ஷேக் காலித் அப்துல்லாஸ் அல் தானியுடன் சந்திப்பு நடத்தினார். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் பரபரப்படும் இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தொடர்பாக கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. கத்தார் இந்தியாவிற்கு சம்மன் அனுப்பியது.

சம்மன்
சரியாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்ற நிலையில் இந்த சம்மன் வந்தது பெரிய சர்ச்சையானது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் வெங்கையா நாயுடு மேற்கொள்ள இருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்நாட்டு துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் நடக்க இருந்த மதிய உணவு விருந்தும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. துணை அதிபர் இன்றி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில கத்தார் தலைவர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விருந்து ரத்து
இந்தியாவில் நபிகள் அவமதிக்கப்பட்டதால் இந்த உணவு விருந்தில் அந்நாட்டு துணை அதிபர் கலந்து கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு கத்தார் - இந்தியா இடையிலான இஸ்லாமிய கருத்து மோதல் காரணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. துணை அதிபர் மருத்துவ காரணம் ஒன்றிற்காக மீட்டிங்கிற்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது என்ன மருத்துவ காரணம் என்று சொல்லப்படவில்லை. சரியாக வெங்கையா நாயுடு கத்தாரில் இருக்கும் போது.. இந்த மோதல் வெடித்தது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications