பஹல்காமில் இறந்த உடல்கள் மீதும் சுட்ட கொடூரர்கள்! கணவரை இழந்த பெங்காளி பெண் கண்ணீர்
பெங்களூர்: யாரும் உயிர் பிழைக்காமல் இருக்க இறந்தவர்களின் உடல்களை கூட தீவிரவாதிகள் விடாமல் சுட்டுக் கொன்றனர் என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவரை பறிகொடுத்த மனைவி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்திற்குள் கடந்த 22 ஆம் தேதி நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 26 பேர் பலியாகினர். இந்தியாவை சேர்ந்த 25 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேர் ஆவர்.

தமிழகம், மகாராஷ்டிராவை சேர்ந்தவர் உள்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சயீத்தின் லஷ்கர் இ-தொய்பா இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன் ஃப்ரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதி
ஆயினும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணைத் தலைவன் சைஃபுல்லா கசூரி , இந்த தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. இந்தியாவே இதை நடத்திவிட்டு நாடகமாடுகிறது. உலக நாடுகள் இந்தியாவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என வீடியோவில் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டான். இந்தியா எப்படியும் அந்த காட்டுமிராண்டி தீவிரவாதிகளை உயிருடன் விடாது என தெரிந்தே நீலிகண்ணீர் வடிக்கிறான் என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
பைசரன் பள்ளத்தாக்கு
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில்தான் இந்த தாக்குதல் நடந்தது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இந்திய கடற்படை அதிகாரி
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடந்த 16 ஆம் தேதி திருமணமான இந்திய கடற்படை அதிகாரி தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற போது தீவிரவாத தாக்குதலில் இறந்தார். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த அந்த பெண், கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது. பின்னர் கணவரின் உடலுக்கு ஜெய்ஹிந்த் என சொல்லி அஞ்சலி செலுத்தினார்.
மேற்கு வங்கம்
அது போல் மேற்கு வங்கத்தை சேர்ந்த பொறியாளரும் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 40 வயதான பொறியாளர் பிதன் அதிகாரி. இவரது மனைவி சோஹினி, 3 வயது மகன் ஹிருதானுடன் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார்.
காஷ்மீருக்கு சுற்றுலா
இவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். அப்போதுதான் பஹல்காமுக்கும் சென்றனர். அப்போதுதான் பிதன், துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சோஹினி கூறுகையில் என் மகன் அம்மா, ஏதோ சப்தம் கேட்குது, நெருப்புனு சொன்னான். இதில் என் மகன் பயந்துவிட்டான்.
பட்டாசு சப்தமா
என் கணவரோ பட்டாசு சப்தமாக இருக்கும் என்றார். அப்போதுதான் அது துப்பாக்கிச் சப்தம் என தெரிந்தது, உடனே என் கணவர் என் கையை பிடித்துக் கொண்டு ஓடினார். நான் திரும்பி பார்க்கும் போது ஒருவரை தீவிரவாதிகள் சுட்டனர். இதில் பலர் கீழே விழுந்தனர். அப்போது நாங்கள் ஓடுவதை பார்த்த தீவிரவாதிகள் என் கணவர் நோக்கி சுட்டார்கள்.
குற்றவாளிகள்
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவர்கள் சுற்றுலா பயணிகளிடம் மதத்தை கேட்டனர். என் கணவர் எப்படியும் உயிருடன் இருப்பார். அவர்கள் சென்றதும் போய் காப்பாற்றிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களோ யாருமே உயிர் பிழைக்கக் கூடாது என்பதற்காக இறந்த உடல்களையும் விடாமல் சுட்டனர். அந்த இடத்தில் போலீஸோ பாதுகாப்பு படையினரோ யாருமே இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications