"நடிகை கையை பிடித்த ராகுல் காந்தி.." பாஜக தலைவரின் கீழ்த்தரமான கருத்து! உண்மையில் நடந்தது என்ன
டெல்லி: ராகுல் காந்தி பாத யாத்திரை தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் மோசமாக விமர்சித்து இருந்த நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று வருகிறார். பாஜகவுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் அவர் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டு உள்ளார்..
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாத யாத்திரை
தொடர்ந்து 150 நாட்களுக்கு நடைபெறும் இந்த பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 20 கிமீ வரை ராகுல் இந்த பாத யாத்திரையில் நடந்து வருகிறார். இந்த பாத யாத்திரை தொடங்கிது முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு கிடைத்ததாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பூனம் கவுர்
இப்போது அவர் தெலங்கானா மாநிலத்தில் பாத யாத்திரை சென்று வருகிறார். இதனிடையே ராகுல் காந்தி பாத யாத்திரை தொடர்பாக பாஜக தலைவர் மோசமான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். அதாவது தெலங்கானா பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்தனர். அவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகை பூனம் கவுரும் பங்கேற்றார்.

மோசமான விமர்சனம்
இதில் பூனம் கவுர் கைகளைப் பிடித்தபடி ராகுல் காந்தி நடக்கும் படத்தைப் பகிர்ந்த பாஜகவின் ப்ரீத்தி காந்தி மோசமாக விமர்சித்து இருந்தார். அதாவது ராகுல் காந்தி தனது தாத்தாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதாக மோசமாகக் கூறி இருந்தார். ப்ரீத்தி காந்தியின் இந்த மோசமான விமர்சனத்தை இணையத்தில் பலரும் கடுமையாகச் சாடினர். பாஜக தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட நெட்டிசன்கள் சாடினர்.

கடும் தாக்கு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் ப்ரீத்தி காந்தியை சாடியிருந்தனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில், "கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி கேவலமாக ட்வீட் போட முடியும். கொலை செய்தவர்களையும் கூட்டுப் பலாத்காரம் செய்தவர்களையும் நன்னடத்தை என்று கூறி விடுவித்த கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வேறு எதை நம்மால் எதிர்பார்க்க முடியும்" என்று கூறி இருந்தார்.

சிவசேனா
காங்கிரஸ் மட்டுமின்றி சிவசேனாவும் இதில் பாஜகவை சாடியுள்ளது. சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, "நமது நாட்டை வலுப்படுத்தவும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் பெண்கள் ஆண்களுடன் கைகோர்த்தும் நடக்க வேண்டும். இது நேருவின் கனவு மட்டுமில்லை.. பாபாசாகேப் அம்பேத்கரின் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரது எண்ணமும் இதுதான்" என்று சாடியுள்ளார்.

விளக்கம்
இதற்கிடையே தெலுங்கு நடிகை பூனம் கவுர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ப்ரீத்தி காந்தியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள அவர், "உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்வது போன்ற கருத்து இது. இப்படி கீழ்தரமாக பேசுபவர்கள் குறித்து பிரதமர் என்ன சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது நான் சிலிப்பாகி விழ போனேன். நான் விழாமல் இருக்கவே ராகுல் காந்தி எனது கையை பிடித்தார்" என்று விளக்கம் அளித்து அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications