இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில்.. கூகுளில் அதிகம் தேடப்பட்டது என்ன! 2வது இடத்தில் பெரிய சர்ப்ரைஸ்
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்த காலகட்டத்தில் நெட்டிசன்கள் இது தொடர்பாக அதிகம் என்ன தேடினர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இக்கட்டான சூழலில் இணையம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்த செய்திகள் இடம்பெற்று இருந்தன. பலரும் இரு தரப்பு மோதல் குறித்தும், இந்தியா எப்படி பாகிஸ்தானைத் திருப்பி அடித்தது என்பது குறித்துமே ஆர்வமாகப் பார்த்தனர். இந்தக் காலகட்டத்தில் நெட்டிசன்கள் இணையத்தில் எது தொடர்பாக அதிகம் தேடினர் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நாம் பார்க்கலாம்.

விமான நிலையங்கள் மூடப்பட்டதா?
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று இதுதான். பாகிஸ்தானில் விமான நிலையங்கள் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால், இந்தியாவில் வடமேற்குப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் விமானச் சேவை வழக்கம் போலவே இருந்தது. நாட்டில் 32 விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், மற்ற விமானங்கள் வழக்கம் போலவே செயல்பட்டன. அதேநேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கலாம் என்பதால் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே ஏர்போர்ட் வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஐபிஎல் ரத்து செய்யப்படுமா?
அடுத்து நெட்டிசன்களிடையே இருந்த மிகப் பெரிய கேள்வி இதுதான். டெல்லி- பஞ்சாப் இடையேயான போட்டி தர்மசாலாவில் நடந்து கொண்டு இருக்கும்போதே பாதுகாப்பு கருதி பாதியில் நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது மோதல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மே 13ம் தேதிக்குள் வீரர்களை ஒருங்கிணைக்க பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. வரும் மே 16ம் தேதி ஐபிஎல் மீண்டும் தொடங்கும் என்றும் ஜூன் 1ம் தேதிக்குள் இறுதிப்போட்டி நடக்கும் என்றும் தெரிகிறது.
ஷெல் தாக்குதல் என்றால் என்ன?
எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இது குறித்தும் நெட்டிசன்கள் அதிகம் தேடியுள்ளனர். ஷெல் தாக்குதல் என்பது பீரங்கி குண்டுகளை வீசும் தாக்குதலாகும். இடைவிடாமல் ஷெல் தாக்குதல் நடத்தும்போது பாதிப்புகள் மோசமாக இருக்கும். எல்லையில் இந்தியப் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்தியா-பாகிஸ்தான் 'போர்' எப்போது முடிவடையும்?
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்தது மோதல் தான் போர் இல்லை என்றாலும் கூட பலரும் இதைப் போர் என்றே கருதி, இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது முடியும் என்றே தேடியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை 26 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. முதல் இரண்டு நாட்கள் இந்திய ராணுவம் ட்ரோன்களை வீழ்த்த மட்டுமே செய்தது. ஆனால், பிறகு திருப்பி அடிக்க தொடங்கியதும், அதைச் சமாளிக்க முடியாமல் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தூதுவிட்டது.
IMF பாகிஸ்தானுக்குக் கடன் கொடுத்ததா?
IMF என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கடனை வழங்கக்கூடாது என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதை தாண்டி கடன் வழங்கப்பட்டது. அதேநேரம் இந்தக் கடனை வைத்தே மோதலை நிறுத்த பாகிஸ்தானுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications