மொத்தமாக ஒரு நாடே அழியும்.. ஆதாரமே இருக்காது! அதென்ன "வேளாண் தீவிரவாதம்.." இந்தியா மீதும் தாக்குதல்?
டெல்லி: மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சையைக் கடத்தியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களை குறிவைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை வேளாண் தீவிரவாதம் என்றே கூட சிலர் குறிப்பிடுகிறார்கள். இது எந்தளவுக்கு ஆபத்தானது.. இந்தியா கடந்த காலங்களில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் போர் என்பது வேறுமென ஆயுதங்களைக் கொண்டு போர் செய்வது மட்டுமில்லை.. டிஜிட்டல் போர், சைபர் தாக்குதல் எனப் போர் முறைகள் புதிய பரிமாணங்களைத் தொட்டுவிட்டது. இப்போது விவசாய நிலங்கள் புதிய போர்க்களங்களாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பூஞ்சை கடத்தல்
சீனாவைச் சேர்ந்த இருவர் ஒரு ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவுக்குள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் இருவரையும் கைது செய்ததாதல் ஒரு மிகப் பெரிய விவசாய பேரழிவு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. விவசாய நிலங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா தொடங்கிப் பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டும் வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆபத்து ஏன்
பொதுவாகவே மற்ற துறைகளை விட விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகள் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகளாக உள்ளன. ஏனெனில், விவசாய துறைகளில் நடத்தப்படும் தாக்குதல்களை ஆதாரத்தோடு கண்டுபிடிப்பது கடினம்.. மேலும் உணவுகளை எளிதில் ஆயுதமாக்கவும் முடியும். குறிப்பாக விவசாயத்தை நம்பியிருக்கும் நாடுகளின் பொருளாதாரத்தை அழிக்க இது சிறந்த மற்றும் செலவு குறைந்த வழியாக இருக்கும்.
இந்தச் சூழலில் தான் நோய்க் கிருமியைக் கடத்த முயன்றதாக இப்போது சீனாவைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. டாக்சிக் பங்கஸ், அதாவது ஒரு வித பூஞ்சையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வகை பூஞ்சைகளால் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் பல பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுகிறது.

பயாலஜிக்கல் ஆயுதம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பயிர்களை அழிக்கும் பயாலஜிக்கல் வெப்பன் தாக்குதலாக இது இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுபோன்ற பயோ தாக்குதல்கள் ஒரு முறை மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திவிட்டு விட்டுவிடாது. அது நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அழித்து சமூக அமைதியின்மையை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மற்ற தாக்குதல்களைப் போல விவசாய நிலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.
மேலும், சட்டப்படியும் இதில் பெரிய சிக்கல் உள்ளது. மனிதர்கள் மீது குறிவைக்காமல் நடத்தப்படும் பயாலஜிக்கல் தாக்குதல்களுக்குத் தண்டனைகளை விதிக்கும் சர்வதேச சட்ட கட்டமைப்புகள் எதுவும் தற்போது இல்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் கூட இதுபோன்ற தாக்குதல்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவிலும் தாக்குதல்?
கடந்த 2016ம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இது தொடர்பாக விரிவான ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் வங்கதேசத்தில் பரவிய நச்சு பூஞ்சை மேற்கு வங்கத்தின் இரண்டு மாவட்டங்களில் கண்டறியப்பட்டது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களிலும் கோதுமை சாகுபடியை மூன்று ஆண்டுகளுக்கு அரசு தடை விதித்தது.
மேலும், வங்கதேச எல்லையிலிருந்து 5 கிமீ தொலைவுக்குக் கோதுமை சாகுபடிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் அப்போது பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடிந்தது. இது வேண்டுமென்றே இந்திய விவசாய நிலங்களில் பரப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இந்தியாவால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
பாகிஸ்தானில் இருந்த வைரஸ்!
அதேபோல், 2015ல் பருத்தி இலை சுருட்டை வைரஸ் பாதிப்பு பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாபில் சில மாவட்டங்களில் ஏற்பட்டது. அந்த குறிப்பிட்ட திரிபு அதற்கு முன்பு இந்தியாவில் பரவியதே இல்லை. பாகிஸ்தானின் வெஹாரி மற்றும் முல்தானில் உள்ள இரு பருத்தி ஆலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த திரிபுகள் அவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும், அது திட்டமிட்டுப் பரப்பப்பட்டது என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடவடிக்கை இல்லை.
இதுபோலத் தான் விவசாய நிலங்களை எளிதாகக் குறிவைக்க முடியும். ஆதாரத்தைத் திரட்டுவதும் கடினம் என்பதாலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. வரும் காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் அதிகரிக்கவே செய்யும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications