கியரை மாற்றும் பாஜக! ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா.. 2024 தேர்தலுக்கு ஓபிசி தலைவர்களுடன் பக்கா பிளான்
டெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ரெடியாகி வரும் நிலையில், பாஜக முதலில் இப்போது உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதிலும், இப்போதே தேர்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்டன.
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைந்து களமிறங்க உள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசம்: இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் பாஜகவும் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டது. பாஜகவைப் பொறுத்தவரை அவர்கள் தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் குறிப்பாக இந்தி மாநிலங்களில் வலுவாக உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக இருக்கிறது. இதற்கான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே அதிருப்தி அதிகமாக இருக்கும் 25% எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே அங்கே வலுவாக உள்ள சாதிகளைப் பின்னணியாகக் கொண்ட கட்சிகளையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அங்குள்ள சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.
ஓபிசி தலைவர்: இந்த சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்.பி.எஸ்.பி) கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஓபிசி வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாகும். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறித்து சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமூக நீதி, நாட்டின் பாதுகாப்பு, நல்லாட்சி வழங்கவும் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பெண்கள், ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கவும் பாஜகவுடன் இணைந்து போராட உள்ளோம்" என்று அறிவித்துள்ளனர்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசில் அமைச்சராக இருந்தவர் தான் இந்த எஸ்.பி.எஸ்.பி கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். இருப்பினும், 2022 உபி தேர்தல் சமயத்தில் அவர் தனது அமைச்சரவை பதவியே ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்தப் படத்தை அமித் ஷாவும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில், "சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயன்றேன். ஆனால், அவர்கள் எதுவும் கூறவில்லை. நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேசினோம். இருப்பினும், அவர்கள் உரியப் பதிலை அளிக்கவில்லை. நாங்களும் எத்தனை காலம் தான் காத்திருக்க முடியும். இதன் காரணமாகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசுடன் இணைந்து சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மற்றொரு ஒபிசி தலைவர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருந்த தாரா சிங் சவுகானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். யோகி ஆதித்யநாத்தின் அரசில் வனத்துறை அமைச்சராக இவர், 2022 தேர்தலுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்து சமாஜ்வாதியில் இணைந்தார்.
கிழக்கு உ.பி.யைச் சேர்ந்த ஓபிசி தலைவரான இவர், சமீபத்தில் தான் அமித் ஷாவை சந்தித்து மீண்டும் மீண்டும் பாஜகவில் இணைந்திருந்தார். இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கிய ஓபிசி தலைவர்கள் பாஜகவுடன் கை கோர்த்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்குள் மேலும் பல ஓபிசி தலைவர்களைத் தனது பக்கம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications