ஆந்திராவுக்கு அடிச்சது ஜாக்பாட்..பட்ஜெட்டில் தாராளம் காட்டிய மத்திய அரசு! அதென்ன ஓர்வகல் முனை?
டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில் முதலீடுகளை ஈர்க்க விசாகப்பட்டினம்-சென்னை-ஓர்வகல்-ஹைதராபாத் தொழில்துறை வழித்தடம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடம் நிறுவப்படும் என்ற அறிவிப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஓர்வகல்-ஹைதராபாத் தொழில்துறை வழித்தடம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழகத்திற்கு எந்த விதமான திட்டங்களையும் நிதியமைச்சர் அறிவிக்கவில்லை என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட் ஆந்திராவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம். அம்மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பட்ஜெட்டில் 15,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது இந்த நிதியானது. ஆந்திர தலைநகரான அமராவதியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக விசாகப்பட்டினம் - சென்னை- ஓர்வாகல்-ஹைதராபாத் தொழில்துறை வழித்தடம் மற்றும் ஆந்திர பிரதேசத்தை உள்ளடக்கிய ஹைதராபாத் பெங்களூர் தொழில்துறை வழித்தடம் நிறுவப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். மேலும் ராயலசீமா, பிரகாசம் வடக்கு ஆந்திர பிரதேச மாவட்டங்களுக்கும் பின்தங்கிய பகுதி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு உதவும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் அமராவதிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சியை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்கின்றனர் எதிர்க்கட்சியினர். இது ஒருபுறம் இருக்க ஓர்வகல்-ஹைதராபாத் தொழில்துறை வழித்தடம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் உள்ள கொப்பர்த்தியில் தண்ணீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் ஓர்வக்கல் சிறப்பான முன்னேற்றத்தை அடையுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் ஓர்வகல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஓர்வாகல் கிராமத்தில் 4,742 ஏக்கர் பரப்பளவில் மெகா தொழில் மையம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டது. இது கர்னூல், நந்தியால், கடப்பா மற்றும் திருப்பதி வழியாக ஹைதராபாத்தை சென்னையுடன் இணைக்கும் NH 40 தேசிய நெடுஞ்சாலையில் அமையவுள்ளது. அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த நிலப்பரப்பு தொழில்துறையினருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை காரிடாரின் ஒரு பகுதியாக ஓர்வகல் இப்போது ஒரு பெரிய தொழில்துறை மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் பெங்களூரு இடையே உள்ள பிராந்தியத்தில் பல உற்பத்தி மையங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த தொழில்துறை மையம் கட்டப்படுகிறது. இது தென்னிந்தியாவில் உள்ள மற்ற இரண்டு பெரிய பொருளாதார காரிடார்களான சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார் (CBIC) , மற்றும் விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை காரிடார் (VCIC) இடையேயான முக்கிய இணைப்பாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications