சிக்சர் அடித்த இந்தியா.. டெல்லி ஜி20 உச்சி மாநாட்டை திடீரென புகழ்ந்து தள்ளிய சீனா! இது ஏன் முக்கியம்
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிலையில், இது குறித்து மவுனம் கலைத்துள்ள சீனா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த இரண்டு நாள் நிகழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் இணைத்ததைச் சொல்லலாம்.

அதேபோல ஜி20இல் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சர்வதேச அளவில் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜி20 மாநாடு: இந்த மாநாட்டில் உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதை முடிவுக்குக் கொண்டு வரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் இதைப் பாராட்டி வருகின்றனர். ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி கிடைத்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
உலகின் பல நாடுகளும் இந்தியாவைப் பாராட்டிய போதிலும், சீனா இதில் உடனடியாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனா முதல்முறையாக மவுனத்தைக் கலைத்துள்ளது. அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டெல்லி பிரகடனம், சர்வதேச சவால்களைச் சமாளிக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் ஒரு சாதகமான சமிக்ஞையை உலகிற்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளது.
சீனா: இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "ஜி20 உறுப்பு நாடுகள் அனைத்தும் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது பாசிட்டிவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.. டெல்லி உச்சி மாநாட்டில் சீனாவுக்கு முக்கிய இருக்கிறது. வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒருமித்த முடிவுகளை அடைய வேண்டும் என்பதிலும் சீனா எப்போதும் ஆதரவை அளித்தே வருகிறது" என்றார்.
இந்த டெல்லி பிரகடனத்தில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவை நேரடியாக விமர்சிக்கும் வகையிலான கருத்துகள் எதுவும் இல்லை. இது தொடர்பான கேள்விக்கு, "உக்ரைன் பிரச்சினையில் எங்கள் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டோம்.. அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்" என்றார். உக்ரைன் போர் விவகாரத்தில் சீனா எந்த பக்கத்திற்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
என்ன சொன்னார்: தொடர்ந்து பேசிய மாவோ நிங், "ஜி20 தலைவர்களின் பிரகடனம் ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும். டெல்லி உச்சி மாநாடு ஜி20 சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக இருக்கிறது. அதேநேரம் இந்த உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான இடம் இல்லை.. பனிப்போர் மனப்பான்மையைக் கைவிடுவதே உக்ரைன் போர் விவகாரத்தில் இறுதி தீர்வு என்று நாங்கள் நம்புகிறோம்.. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும்" என்றார்.
இந்த ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சில காரணங்களுக்காகக் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாகச் சீனப் பிரதமர் லீ கியாங் தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர் மோதல் நிலவி வரும் நிலையில், அவர்களே டெல்லி ஜி20 மாநாட்டை பாராட்டியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications