இந்தியாவில் அறிமுகம்.. எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவை பெற மாத கட்டணம் எவ்வளவு?
டெல்லி: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனம் சார்பில் செயற்கைகோள் மூலமாக இண்டர்நெட் சேவையை நம்நாட்டில் வழங்க மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது. இந்த இண்டர்நெட் சேவைக்கான சோதனை இன்னும் 15 முதல் 20 நாட்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவை வழங்கப்பட உள்ள நிலையில் அதனை பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் ‛ஸ்டார்லிங்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் என்பது செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க்கின் ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்த ‛ஸ்டார்லிங்'.

‛ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனமாகும். ‛ஸ்பேஸ் எக்ஸ்' சார்பில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி அதன்மூலம் பூமிக்கு ‛இண்டர்நெட்' சேவையை வழங்கும் பணியை தான் ‛ஸ்டார்லிங்' செய்து வருகிறது.
‛ஸ்டார்லிங்' சார்பில் நம் நாட்டில் இண்டர்நெட் சேவையை வழங்க எலான் மஸ்க் விரும்பினார். இதற்கு அவர் அனுமதியும் கோரியிருந்தார். ஆனால் 2 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இன்று அனுமதி வழங்கி உள்ளது.
செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் சேவையை தொடங்குவதற்கான ‛சேட்டிலைட் கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை வழங்கி உள்ளது. இதற்கான ஸ்பெக்டரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் நம் நாட்டுக்கு பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ‛ஸ்டார்லிங்' செயற்கைகோள்கள் மூலமாக இண்டர்நெட் சேவை என்பது கிடைக்க உள்ளது. இந்த ‛ஸ்டார்லிங்' செயற்கைகோள் என்பது வழக்கமான Geostationary satellites உடன் ஒப்பிடும்போது முற்றிலும் வித்தியாசமானது. ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு இண்டர்நெட் சேவை வழங்குவதற்காக எலான் மஸ்க்கின் ‛ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் இதுவரை 7,000 LEO செயற்கோள்களை அனுப்பி சுற்றவைத்துள்ளது.
இந்த செயற்கைகோள்கள் தான் ‛ஸ்டார்லிங்க்' இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. மேலும் நம் நாட்டில் 15 முதல் 20 நாட்களில் ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவைக்கான சோதனை நடைபெறும். அதன்பிறகு மக்களுக்கு ‛ஸ்டார்லிங்' அதிவேக இண்டர்நெட் சேவை கிடைக்கும். தற்போது இந்த சேவைக்கான கட்டணம் எவ்வளவு? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நம்நாட்டில் மக்கள் பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். இந்த கட்டணத்தை பொறுத்து இண்டர்நெட் சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மக்கள், ‛ஸ்டார்லிங் கிட்' ஒன்றை வாங்க வேண்டும். அதில் சேட்டிலைட் டிஷ், வைபை ரூட்டர் உள்ளிட்டவை இருக்கும். அதன் விலை என்பது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‛கிட்' இருந்தால் மட்டுமே ‛ஸ்டார்லிங்' இணையதள சேவையை பெற முடியும்.
இருப்பினும் முதற்கட்டமாக ஸ்டார்லிங் நிறுவனம் தனது இண்டர்நெட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் ‛அன்லிமிடெட் டேட்டா பிளானை மாதம் 10 டாலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக ‛தி எகனாமிக் டைம்ஸ்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் மாதம் ரூ.857 க்கு ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவை முதலில் சில மாதங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
இருப்பினும் ‛ஸ்டார்லிங்' நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான கட்டணம் பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை. தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அதன்பிறகே உண்மையான கட்டணம் தெரியும். இந்த ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தை எடுத்து கொண்டால் 130 நாடுகளுக்கு இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இந்த சேவை உள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் இந்த சேவையை எலான் மஸ்க் தொடங்கினார். வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவையை பயன்படுத்த அந்த நாட்டின் கரன்சியின்படி மாதம் 4,200 taka செலுத்த வேண்டும். இதனை அமெரிக்க டாலரில் பார்த்தால் 35 டாலர் வரும். இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் ரூ.2,995 கட்டணம் வரும். மேலும் இண்டர்நெட் சேவையை பெறுவதற்கான ‛கிட்' பெற ஒருமுறை கட்டணமாக ரூ.47,000 Taka செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 ஆயிரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications