"ரூ.1000 கோடி.." பயனாளிகள் டேட்டாவை விற்கும் ரயில்வே துறை? தனிப்பட்ட தகவல்கள் லீக்காகும் அபாயம்
டெல்லி: ஐஆர்சிடிசி நிர்வாகம் பயனாளிகளின் தகவல்களை விற்று சுமார் ரூ. 1000 கோடி நிதி திரட்ட உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் அதிக அளவு ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரயில்வே. நாடு முழுவதும் தினசரி சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.
ரயில் பயணங்களுக்கு ஐஆர்சிடிசி மூலமே முன்பதிவுகளும், உணவு தயாரிப்பு மற்றும் டெலிவரி மேற்கொள்ளப்படுகிறது. வருவாய் அதிகரிக்க ஐஆர்சிடிசி புதிய திட்டத்தை அறிவித்து இருந்தது.

இந்தியன் ரயில்வே
உலகில் பெரும்பாலான நாடுகளில் பயணிகள் ரயில் பயணம் மூலமே அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும் நிலைமை நேர் மாறானது. நமது நாட்டில் பயணிகள் ரயில் மூலம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து நஷ்டமே ஏற்படுகிறது. சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயே இதைச் சமாளிக்க உதவுகிறது. இதையடுத்து ரயில்வே துறையில் செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்க இந்தியன் ரயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நிதி திரட்ட திட்டம்
அதன் ஒரு பகுதியாக ஐஆர்சிடிசி நிர்வாகம் தனது பயனாளிகள் தரவுகளை விற்று, நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் மூலம் 1,000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட ஐஆர்சிடிசி திட்டமிட்டு இருந்தது. பயனாளிகளின் தரவுகளின் மூலம் எப்படி நிதி திரட்டலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கவும் ஐஆர்சிடிசி சமீபத்தில் டென்டர் வெளியிட்டு இருந்தது.

டென்டர்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள டென்டரில், "இந்திய ரயில்வே வாடிக்கையாளர் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மூலம் நிதி திரட்ட விரும்புகிறது. வருவாய் அதிகரிக்கவும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதில் எந்தெந்த வழிகளில் வருவாய் ஈட்ட முடியும் என்பது குறித்து ஆலோசனை அளிக்க ஒரு நிறுவனத்தை கன்சல்ட் செய்ய ஐஆர்சிடிசி விரும்புகிறது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

தனிப்பட்ட தகவல்கள்
இது தொடர்பாக இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன், "பயணிகள், சரக்கு மற்றும் பார்சல் வணிகம் பற்றி தரவுகளை அந்த நிறுவனம் ஆராயும். அதாவது ஐஆர்சிடி வாடிக்கையாளர்களின் பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல் ஐடி, பயணிகளின் எண்ணிக்கை, பயண வகுப்பு, கட்டண முறை, பாஸ்போர்ட், கட்டணம் மற்றும் முன்பதிவு முறை உள்ளிட்டவற்றை அந்த வெளி நிறுவனம் ஆராயும்" என்று கூறப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு
ஐஆர்சிடிசி தளத்திற்கு இந்தியாவில் மொத்தம் 6 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். தினசரி பல ஆயிரம் பேர் புதியதாகவும் பதிவு செய்து வருகின்றனர். ஐஆர்சிடிசியின் இந்த டென்டர் அறிவிப்பு காரணமாக இவர்களின் பெயர், வயது, மொபைல் எண் உட்பட முக்கிய தரவுகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

விளக்கம்
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் தனிநபர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் வரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாது என ஐஆர்சிடிசி தெரிவித்து உள்ளது. பயணிகள் முன்பதிவு, உணவு விநியோகம் உள்ளிட்ட பயணிகள் சேவையைத் தரவுகளைக் கொண்டு மேம்படுத்தவே டெண்டர் கோரப்பட்டு உள்ளதாகவும் தரவுகளை வணிக ரீதியாக விற்கப்படுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications