"சென்சார் ஃபெயிலியர்!" கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கோளாறு.. எஸ்எஸ்எல்வி தோல்வி! இஸ்ரோ முக்கிய விளக்கம்
டெல்லி: இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் இப்போது வெளியாகி உள்ளது
சர்வதேச அளவில் குறைந்த விலையில் விண்வெளிக்கு சாட்டிலைட்களை அனுப்புவதில் பெயர் பெற்றது இஸ்ரோ. இதன் காரணமாகவே உலகின் பல நாடுகளும் சாட்டிலைட் செலுத்து இந்தியாவிடம் வருகிறது.
இதற்காக இந்தியா பிஎஸ்எல்வி என்ற ராக்கெட்டையே வழக்கமாகப் பயன்படுத்தும். இந்த ராக்கெட் மூலம் 50க்கும் மேற்பட்ட பயணங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

புதிய முயற்சி
இருப்பினும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சாட்டிலைட்களை விண்வெளிக்கு ஏவ ஆகும் செலவுகள் மிகவும் அதிகம். இதனால் இஸ்ரோவுக்கு கிடைக்கும் வருவாயும் குறைகிறது. அதேபோல தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் சிறிய எடை கொண்ட சாட்டிலைட்களையே விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. சிறிய ரக ராக்கெட்களை பிஎஸ்எல்வி மூலம் அனுப்பினால் செலவும் அதிகமாக இருக்கும்.

இஸ்ரோ
இவை அனைத்திற்கும் தீர்வாக இஸ்ரோ நிறுவனம் எஎஸ்எஸ்எல்வி என்ற ராக்கெட்டை தனியாக ரெடி செய்தது. இதன் மூலம் 500 கிலோ வரை எடை கொண்ட சாட்டிலைட்களை பூமியில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவு வரை எடுத்துச் செல்ல முடியும். அதேபோல 6 பேர் மட்டும் இருந்தால் போதும், வெறும் 72 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாகவே ராக்கெட்டை அசெம்பிள் செய்துவிடலாம்.

தோல்வி
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று முதல்முறையாகக் காலை ஸ்ரீ ஹரிகோட்டா சதீன் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் இது ஒரு முக்கிய நாளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக எஸ்எஸ்எல்வியின் முதல் பயணம் வெற்றிகரமானதாக இருக்கவில்லை. எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வட்டப்பாதையில் நிலைநிறுத்தத் தவறியதால் சாட்டிலைட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

பயன்படுத்த முடியாது
மேலும், இதற்கான காரணத்தையும் இஸ்ரோ விளக்கி உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டரில், "எஸ்எஸ்எல்வி ராக்கெட் சாட்டிலைட்களை வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்குப் பதிலாக நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தி உள்ளது. இதனால் சாட்டிலைட்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

என்ன காரணம்
சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, மீட்பு நடவடிக்கை செய்ய வேண்டிய லாஜிக் தோல்வி அடைந்ததே இந்த தவற்றுக்குக் காரணம். என்ன தவறு நடந்தது என்பதை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் எஸ்எஸ்எல்வி-2 ராக்கெட்டை செலுத்துவோம்" என்று பதிவிடப்பட்டு உள்ளது.

சாட்டிலைட்கள்
இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் இரு சாட்டிலைட்களை கொண்டு சென்றது. குறைந்த எடை கொண்ட இஓஎஸ் 02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு சாட்டிலைட்கள் இதில் இடம் பெற்று உள்ளது. இதில் ஆஸாதிராட் சாட்டிலைட் 750 அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications