"ரூ 971 கோடி.." புதிய நாடாளுமன்றத்துக்குள் கொட்டிய மழை நீர்! என்ன காரணம்.. மத்திய அரசு தந்த விளக்கம்
டெல்லி: நாட்டில் பல பகுதிகளிலும் இப்போது கனமழை கொட்டி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் மழை நீர் தேங்கியது. நாடாளுமன்ற லாபியில் நீர் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்கே பக்கெட் ஒன்றை வைத்தே மழை நீரை ஊழியர்கள் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இது தொடர்பாக லோக்சபா செயலகம் விளக்கமளித்துள்ளது.
இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. டெல்லியில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அங்கு திடீரென கொட்டிய மழையில் சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் மழை வெள்ளம் பாய்ந்ததில் 3 பேரே உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற கட்டிடம்: நேற்றைய தினம் காலை டெல்லியில் 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை கொட்டியது.. சுமார் 1 மணி நேரத்தில் சுமார் 112.5 மிமீ மழை கொட்டிய நிலையில், பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த கனமழையால் டெல்லி நாடாளுமன்ற வளாகமும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலைகள், நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
நாடாளுமன்றத்தின் உள்ளே, லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டது. இதை அங்கிருந்த ஊழியர்கள் பக்கெட் வைத்துப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இது மிகப் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டது குறித்து மக்களவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது..
விளக்கம்: அதாவது லாபியின் மேல் கண்ணாடி குவி மாடங்கள் இருக்கிறது. அதைச் சரி செய்யப் பிசின் பொருள் கொஞ்சம் இடம்பெயர்ந்து விட்டதாகவும் இதன் காரணமாகவே தண்ணீர் லீக் ஏற்பட்டதாகவும் லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று டெல்லியில் பெய்த கனமழையால் புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் லாபியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மோசமான வானிலையை கட்டிடம் தாங்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும், வளாகத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகர் துவாரில் தண்ணீர் தேங்குவது தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. பார்லிமென்ட் கட்டிடத்தில் இயற்கை ஒளி உள்ளே வருவதை உறுதி செய்யப் பல இடங்களில் குவி மாடங்கள் நிறுவப்பட்டு இருக்கிறது. பசுமை பாராளுமன்றத்தை அமைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் லாபி உட்படக் கட்டிடத்தின் பல பகுதிகளில் கண்ணாடி குவி மாடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான சூரிய ஒளியை உள்ளே வருகிறது. இதை நாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். நேற்று பெய்த கனமழையின் போது, கட்டிடத்தின் முன்புறம் கண்ணாடி குவி மாடங்களைச் சரிசெய்யப் பயன்படுத்தப்பட்ட பிசின் லேசாகக் கொட்டிவிட்டது. இதனால் லாபியில் சிறிய அளவிலான நீர் கசிவு ஏற்பட்டது.
சரி செய்யப்பட்டது: இருப்பினும், இந்த தண்ணீர் லீக் சிக்கல் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டது.. உடனடியாக சரி செய்யப்பட்டது. அதன்பிறகு, நீர் கசிவு எதுவும் ஏற்படவில்லை. அதே போல், மகர் துவாருக்கு எதிரே தேங்கிய நீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications