"கண்ணீர் புகை குண்டுகளே காரணம்!" டெல்லி போராட்டத்தில் விவசாயி பரிதாபமாக பலி! உறவினர்கள் பகீர் புகார்
டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் 65 வயதான கியான் சிங் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அவரது உறவினர்கள் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருப்பினும், இதுவரை அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
உயிரிழப்பு: இதற்கிடையே இந்த போராட்டத்தில் இப்போது முதல் மரணம் பதிவாகி இருக்கிறது. 'டெல்லி சலோ' போராட்டத்திற்காக டெல்லி நுழைவாயில்களில் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அதன்படி ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபைச் சேர்ந்த 65 வயது விவசாயி உயிரிழந்துள்ளார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த விவசாயி குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சேகி கிராமத்தைச் சேர்ந்த கியான் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ஐந்து விவசாயிகளுடன் கியான் சிங் தள்ளுவண்டியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது உறவினர் ஜகதீஷ் சிங்கிடம் கூறியிருக்கிறார்.
உறவினர்கள்: இது தொடர்பாக ஜகதீஷ் சிங் கூறுகையில், "சம்பு காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை அழைத்து அவரை ராஜ்புரா சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இருப்பினும், மூச்சுத் திணறல் இருந்ததால் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள்.
அவருக்கு ஆம்புலன்சிலேயே சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. காலை 5 மணிக்குப் பாட்டியாலா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும், காலை 7.45 மணியளவில் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்" என்றார்.
யார் அவர்: பாட்டியாலா துணை ஆணையர் ஷோகத் அஹ்மத் பர்ரே விவசாயி உயிரிழந்துள்ளதை உறுதி செய்தார். மாரடைப்பு காரணமாக விவசாயி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த கியான் சிங், கியான் சிங் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியில் (KMSC) உறுப்பினராக இருந்தார், இந்த அமைப்பு உட்பட பல அமைப்புகள் இணைந்து தான் டெல்லி சலோ போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
65 வயதான கியான் சிங்கிற்கு இதுவரை திருமணமாகவில்லை. அவர் தனது உறவினர்களுடன் தான் தங்கி இருந்துள்ளார். அவரது குடும்பத்திற்குச் சொந்தமாக சுமார் 1.5 ஏக்கர் நிலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர்ப் புகைக் குண்டுகள்: உயிரிழந்த விவசாயி உறவினர் ஜகதீஷ் சிங் கூறுகையில், "பிப்ரவரி 13ஆம் போராட்டத்தின் போது அவர் போராட்டத்தின் மையத்திற்குச் சென்றார். அங்கே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், அதன் அருகே இருந்தார். அதில் இருந்து வந்த புகையைச் சுவாசித்தது முதலே தொடர்ந்து அசவுகரியமாக இருப்பதாகக் கூறி வந்தார். இதற்காக மருந்துகள் கூட எடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில் தான் தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது" என்றார்.
கியான் சிங் விவசாயச் சங்கங்கள் நடத்தும் போராட்டங்களில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போதும் கூட, அவர் பெரும்பாலான நேரம் எல்லையில் போராட்ட களத்தில் தான்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு நடத்திய விதம் மோசமாக இருப்பதாக விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தும் போது அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அரசு பார்க்க வேண்டும் என்ற சர்வன் சிங், போலீசார் நடவடிக்கைகள் விவசாயிகளைக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications