ஆங்காங்கே கை, கால்கள் கிடந்தன.. சிலரின் முகமே சிதைந்துவிட்டது.. கோர விபத்து பற்றி பயணி பகீர் தகவல்!
டெல்லி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் தடம்புரண்டு மோசமான விபத்தை சந்தித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பயணி ஒருவர், ஆங்காங்கே மக்களின் கைகள், கால்கள் கிடந்ததாகவும், சிலரின் முகம் சிதைந்திருந்தை கண்டதாகவும் கூறிய தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரயில் வழக்கம் போல் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒரே நேரத்தில் 3 ரயில்கள் விபத்துள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இரவு நேரம் என்பதால், மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்து குறித்து உயிர் தப்பிய பயணி கூறுகையில், ரயில் தடம்புரண்ட போதுதான் நான் எழுந்தேன். தடம்புரண்டதால் 10 முதல் 15 பேர் வரை என் மீது அடுத்தடுத்து விழுந்தார்கள். இதனால் எனது கைகள் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் இருந்து வெளியில் வந்தேன். அப்போது ஆங்காங்கே சிலரின் கைகள், கால்கள் கிடந்தன. சிலரின் முகமே சிதைந்த நிலையில் கிடந்தது என்று தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் இருந்து காயமடைந்த பயணி கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications