தேர்தல் பத்திரங்கள் வழியாக.. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் எவை? எவை? லிஸ்ட் இதோ
டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்த தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி வழங்கியது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகையை வாங்கியிருக்கின்றன போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்: வேதாந்தா நிறுவனம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது. கேரளாவை சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனமும் நன்கொடையாக வழங்கியிருக்கிறது. சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ, மேகா என் ஜினியர்ஸ், பாரதி ஏரெடெல், பாரதி இன்போடெக், சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா, நிப்பான் ஸ்டீல் இந்தியா, டிஎல்எப் ஹோம், டிஎல்எப் லிமிடெட்டு, பியூட்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ், எஸ்ஸார் குழுமம், பிலிப்ஸ் கார்பன் பிளாக் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றன.
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ அது தொடர்பான தகவல்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எஸ்பிஐ 4 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள், அவற்றை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களை கடந்த 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ அளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications