"நம்பிக்கையில்லா தீர்மானம்" என்றால் என்ன.. இதுவரை இதனால் ஆட்சியை இழந்த பிரதமர்கள் யார் தெரியுமா!
டெல்லி: மோடி அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதுவரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் யாரெல்லாம் ஆட்சியை இழந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் பிறகு சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் இப்போது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்கிறது.

இந்ச முறை மணிப்பூர் வன்முறை தொடர்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்துள்ளன. இதன் மீதான விவாதம் இன்று தொடங்கும் நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: லோக்சபாவில் பாஜக அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால் மோடி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை... இருந்த போதிலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வைப்பதே இதன் நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்திய வரலாற்றை நாம் பார்க்கும் போது இதுவரை ஏகப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், 3 முறை மட்டுமே அரசு கவிழ்ந்துள்ளன. அதற்கு முன்பு நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்றால் என்னவென பார்க்கலாம்.
லோக்சபாவில் எந்தவொரு அரசுக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள் தான் ஆட்சியில் இருக்க முடியும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானமும் லோக்பசாவில் தான் கொண்டு வர முடியும் ரஜ்யசபாவில் முடியாது. 543+ 2 ஆங்கிலோ இந்திய நிமயன எம்பிக்கள் உட்பட மொத்தம் 545 இடங்களைக் கொண்ட லோக்சபாவில் பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை. ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என லோக்சபா எம்பிக்கள் கருதினால் இந்த தீர்மானத்தைக் கொண்டு வரலாம். இதற்குக் குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு தேவை.
வி.பி.சிங் அரசு: கடந்த 1990ஆம் ஆண்டில் ஜனதா தளத்தின் வி.பி. சிங் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது. பிரதமராகப் பதவியேற்று வெறும் 11 மாதங்களில் அவர்கள் இதை எதிர்கொண்டார்கள்..
ராமர் கோவில் விவகாரத்தில் பாஜக ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், 1990ஆம் ஆம்டு நவம்பர் 10ஆம் தேதிவி.பி. சிங் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தது. லோக்சபாவில் 142க்கு 346 என வாக்குகள் பதிவானது. அப்போது காங்கிரஸை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வி.பி.சிங் அரசுக்கு பாஜக ஆதரவு அளித்து வந்தது.
தேவகவுடா அரசு: சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனதா தளத்தின் தேவகவுடா அரசும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது. இதனால் 10 மாதங்களில் அவர் பிரதமர் பதவியை இழந்தார். 1996 தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் 13 கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கி இந்தியாவின் 11வது பிரதமரானார் தேவகவுடா.
இருப்பினும், 10 மாதங்களில் காங்கிரஸ் தனது ஆதரவை விலகிக் கொள்ள 1997 ஏப்ரல் 11ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தார். அப்போது அவரது அரசுக்கு ஆதரவாக 158 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
வாஜ்பாய்: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1999 ஏப்ரல் மாதம் ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற பிறகு முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இருப்பினும், அடுத்து நடந்த தேர்தலுக்கு பிறகும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2003இல் வாஜ்பாய் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதில் பாஜக அரசுக்கு ஆதரவாக 312 வாக்குகளும் எதிராக 186 வாக்குகளும் பதிவானது.
இது தவிர 1979ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். விவாதம் முடிவதற்குள்ளேயே மொரார்ஜி தேசாய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பிறகு, அரசு கவிழ்ந்தது இந்த ஒரு முறை மட்டுமே. இதில் வாக்கெடுப்பிற்கு முன்பே தேசாய் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications