உளவு பார்க்கப்படும் எதிர்க்கட்சி தலைவர்கள்? அலறவிட்ட ஆப்பிள் அலர்ட்! யாருக்கெல்லாம் போனது? லிஸ்ட்
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களின் ஆப்பிள் ஐபோனுக்கு சென்ற ‛அலர்ட்' மெசேஜ் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தங்களின் செல்போனை உளவு பார்த்து ஹேக் செய்து ஒட்டுகேட்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும் நிலையில் அதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் தான் ஆப்பிள் அலர்ட் மெசேஜ் எந்தெந்த தலைவர்களுக்கு சென்றது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இன்னும் சில 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி உள்ளனர்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்க பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி வரும் தேர்தலில் மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்நிலையில் தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள் பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளனர். அதாவது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ள தலைவர்களின் செல்போன்களுக்கு ‛ஆப்பிள்' சார்பில் ‛அலர்ட்' மெசேஜ் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் ‛‛'ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்' (State Sponsored attackers) மூலம் உங்கள் செல்போன் குறிவைக்கப்படுகிறது. ஆப்பிள் ஐடி மூலம் இயங்கும் ஐபோனை வேறு பகுதியில் இருந்து இயக்க முயல்கிறார்கள். அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்தும் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அலர்ட் மெசேஜை பல்வேறு தலைவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அதோடு மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை உளவு பார்த்து, ஒட்டுகேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛இந்த பிரச்சினையில் மத்திய அரசு அக்கறையாக செயல்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்'' என்றார்.

தற்போது இந்த பிரச்சனை என்பது விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்நிலையில் தான் ‛ஆப்பிள்' சார்பில் ‛அலர்ட்' மெசேஜ் பெற்ற தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பவன் கேரா, கேசி வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், டிஎஸ் சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு ‛அலர்ட்' மெசேஜ் சென்றுள்ளது.
மேலும் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தியின் சில உதவியாளர்கள், அரசியல் நோக்கரான ஓஆர்எப் தலைவர் சமீர் சரண், ‛தி வயர்' நிறுவன எடிட்டர் சித்தார்த்த வரதராஜன் உள்ளிட்டோருக்கும் இந்த ‛அலர்ட்' மெசேஜ் சென்றுள்ளது. இவர்கள் அனைவரும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்களாக உள்ள நிலையில் இந்த ‛அலர்ட்' மெசேஜ் பிரச்சனை என்பது விஸ்வரூபமெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications