யார் இந்த சுதர்சன் ரெட்டி? சி.பி ராதாகிருஷ்ணனை எதிர்த்து களமிறங்கும் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்!
டெல்லி: துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணி பொது வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். யார் இந்த பி. சுதர்சன் ரெட்டி.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
துணை குடியரசுத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். உடல்நிலை காரணமாகவே ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குடியரசுத் தலைவர் முர்முவும் ராஜினாமா கடிதத்தை ஏற்றார். இதையடுத்து அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

துணை குடியரசு தலைவர் தேர்தல்
நமது நாட்டில் துணை குடியரசுத் தலைவர் தான் ராஜ்யசபாவையும் வழிநடத்துவார். இதனால் இந்தப் பதவி மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நமது அரசியலமைப்புச் சட்டப்படி துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருந்தால் உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தச் சூழலில் தான் தேர்தல் ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆளும் தரப்பு சி.பி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தது. எதிர்க்கட்சிகள் "இந்தியா" கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை அறிவிக்க ஆலோசனை நடத்தியது. முதலில் திருச்சி சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அது கடைசி நேரத்தில் மாறியது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கார்கே வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியின் பொது வேட்பாளராக மாஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சுதர்சன் ரெட்டி
ராதாகிருஷ்ணனை போலவே சுதர்சன் ரெட்டியும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். சுதர்சன் ரெட்டி 1946ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தவர். இப்போது தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது சட்டப் படிப்பை ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
1971ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளைக் கையாண்டார். நீதிபதியாவதற்கு முன்பு, இவர் மத்திய அரசுக்காகக் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குச் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
நீதிபதி
1993ம் ஆண்டு மே 2ம் தேதி சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். பிறகு 1995இல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகள் அங்கு நீதிபதியாக இருந்தார். அப்போது அவர் பல முக்கிய வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து 2005இல் அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர், 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகச் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், 2011இல் ஓய்வு பெற்றார். இந்தச் சூழலில் தான் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக கார்கே அறிவித்துள்ளார்.
தேர்தல்
பாஜக கூட்டணிக்கு போதுமான ஆதரவு இருப்பதால் சிபி ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி தேர்தலில் வெல்லவே வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், பொது வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜெகதீப் தன்கர் பெற்ற வாக்குகளை விட சிபி ராதாகிருஷ்ணன் வாக்குகள் குறையலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications