ஜெகதீப் தன்கருக்கு பிறகு துணை ஜனாதிபதி ஆகும் நபர், பாஜகவை சேர்ந்தவர் இல்லையாம்! யார் தெரியுமா?
டெல்லி: நாட்டின் மிகவும் உயரிய பதவிகளில் ஒன்றான துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் நேற்று திடீரெனப் பதவி விலகினார். இதனால் அடுத்து யார் இந்தப் பொறுப்பிற்கு வருவார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கு ஜெகதீப் தன்கருக்கு பிறகு ஹரிவன்ஷ் நாராயண் சிங் என்பவர் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. யார் இவர்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டில் அரசியலமைப்பின் இரண்டாவது மிக முக்கிய பதவியாகத் துணை குடியரசுத் தலைவர் பதவி கருதப்படுகிறது. ராஜ்யசபாவின் தலைவராகவும் துணை குடியரசுத் தலைவரே செயல்படுகிறார். துணை குடியரசுத் தலைவர் பதவியில் ஜெகதீப் தன்கர் நேற்று திடீரெனப் பதவி விலகினார்.

உடல்நிலை காரணமாகப் பதவி விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பிறகு அடுத்த யார் குடியரசுத் தலைவராக வருவார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
எப்போது தேர்தல் நடத்தப்படும்!
இந்திய அரசியலமைப்பின் 68வது பிரிவின் 2வது உட்பிரிவின்படி இது குறித்த விளக்கத்தைக் கொடுக்கிறது. குடியரசுத் துணைத் தலைவரின் பதவி, மரணம், ராஜினாமா அல்லது பதவிநீக்கம் காரணமாகக் காலியாகும்பட்சத்தில் இதை நிரப்புவதற்கான தேர்தல், உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்கும் நபர், பதவி ஏற்ற நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் துணைத் தலைவரின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டாலோ அல்லது பதவி விலகினாலோ அவரின் கடமைகளை யார் செய்வது என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் எதுவும் கூறவில்லை. குடியரசுத் துணைத் தலைவர் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவி ஆகும். இதனால் இந்த இடத்திற்கு அடுத்து யார் வருவார் என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது.
யாருக்கு வாய்ப்பு
இதற்கு முன்பு பாஜக கூட்டணி இருவரைத் துணை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்துள்ளது. முதலில் வெங்கய்யா நாயுடு, இப்போது ஜெகதீப் தன்கர். இருவருமே நீண்ட காலம் அனுபவம் கொண்ட பாஜக தலைவர்கள். அவர்களைப் போலவே நீண்ட அனுபவம் கொண்ட ஒருவருக்கே இந்தப் பதவி போகலாம். அதேநேரம் இந்த முறை பாஜகவுக்குப் பதிலாக முக்கிய கூட்டணிக் கட்சியான ஜேடியுவில் இருந்து ஒருவர் துணை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

ஹரிவன்ஷ் நாராயண் சிங்
அதில் குறிப்பாக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பெயர் அதிகம் அடிபடுகிறது. இப்போது ராஜ்யசபாவில் துணைச் சபாநாயகராக இவர் இருக்கிறார். ஜெகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில், இன்று ராஜ்ய சபாவும் கூட ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையிலேயே கூடியது. எனவே, அடுத்து ஹரிவன்ஷ் நாராயண் சிங் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகலாம் எனச் சொல்லப்படுகிறது. யார் இந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா என்ற பகுதியில் 1956 ஜூன் 30ம் தேதி பிறந்தவர். 69 வயதாகும் இவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பிறகு சில ஆங்கில மற்றும் இந்தி செய்தித்தாள்களிலும் வேலை செய்துள்ளார்.
மூத்த அரசியல்வாதி
அதன் பிறகு 2014ம் ஆண்டில் அவர் முதல்முறையாக ராஜ்யசபா எம்பி ஆனார். நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியில் இருந்து ஹரிவன்ஷ் நாராயண் சிங் ராஜ்யசபாவுக்கு தேர்வானார். கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக ராஜ்யசபாவின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு 125 வாக்குகள் கிடைத்த நிலையில், எதிர்த்தரப்பிற்கு 105 வாக்குகள் மட்டுமே விழுந்தது.
கடந்த 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். 2020ல் அவர் பீகாரிலிருந்து மீண்டும் இரண்டாவது முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானார். தொடர்ந்து ராஜ்யசபா துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். மூத்த அரசியல்வாதி, சர்ச்சைகளில் சிக்காதவர், பாஜகவை சேராதவர் என்ற போதிலும் பாஜக உடன் நல்லுறவை வைத்திருப்பவர் என்பது போன்ற காரணங்களால் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அடுத்த துணை குடியரசுத் தலைவராகத் தேர்வாக வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications