அன்று 20.. இன்று 97: “வாழும் சாட்சி” பெரியவரை வணங்கிய மோடி.. இவருக்கும் செங்கோலுக்கும் என்ன தொடர்பு?
டெல்லி : நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவியுள்ள நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்ற ஒரு பெரியவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அவருக்கும் இந்தச் செங்கோலுக்கும் என்ன சம்பந்தம்?
டெல்லியில் ஏற்கனவே நாடாளுமன்ற வளாகம் அமைந்திருப்பதற்கு அருகிலேயே 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சிறப்பு மிக்க செங்கோல் : நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி இன்று காலை ஆதினங்களின் ஆசி பெற்ற பிரதமர் மோடி, செங்கோலை பெற்றுக்கொண்டு அதனை மக்களவைக்குள் கொண்டு சென்றார். இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டதன் அடையாளமாக, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் செங்கோல் ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தச் செங்கோல் இன்று புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ளது.

வும்மிடி பங்காரு ஜுவல்லரி : சென்னையில் பிரபலமான நகைக்கடையான உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் ஜுவல்லரியில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டது. 1947ல் வும்மிடி எத்திராஜுலுவும், அவரது சகோதரர் வும்மிடி சுதாகரும் இணைந்து 'செங்கோல்' தயாரித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோலில் புடைப்பு வேலை வெவ்வேறு பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது. பின்னர் அந்தச் செங்கோல் தான் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவில் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் ஓத, நேருவிடம் வழங்கப்பட்டது.
வும்மிடி குடும்பத்தினர் : இன்று அந்தச் செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள நிலையில், செங்கோலை உருவாக்கிய வும்மிடி குடும்பத்தினர் டெல்லியில் நடைபெற்ற புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவின்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர். 97 வயதான வும்மிடி எத்திராஜுலு உள்ளிட்ட வும்மிடி குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இதற்காக டெல்லி சென்றனர்.
ஜவஹர்லால் நேருவிடம் வழங்குவதற்காக வும்மிடி ஜுவல்லர்ஸ் சார்பில் செங்கோல் தயாரிக்கப்பட்டபோது, வும்மிடி எத்திராஜுலுவுக்கு 20 வயது. அவரது சகோதரர் வும்மிடி சுதாகருக்கு 12 வயது. தற்போது 97 வயதாகும் வும்முடி எத்திராஜுலுவும், 88 வயதாகும் வும்மிடி சுதாகரும், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதைக் காண வந்தனர்.
தேடிக் கண்டுபிடித்த குடும்பத்தினர் : சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார இதழில் இந்த சிறப்பு வாய்ந்த செங்கோல் பற்றிய செய்தி வெளியான பிறகுதான் வும்மிடி பங்காரு நகைக்கடை முதலாளிகளின் குடும்பத்தினருக்கே இதுபற்றிய செய்தி தெரியவந்துள்ளது. பின்னர், அந்தச் செங்கோல் எங்கு இருக்கிறது என்ற தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் விளைவாக, 2021ஆம் ஆண்டில் அலகாபாத் (இன்றைய பிரயாக்ராஜ்) ஆனந்த பவன் அருங்காட்சியகத்தில் அந்தச் செங்கோல் இருப்பது தெரியவந்தது. அங்கு அந்தச் செங்கோல், நேருவுக்கு பரிசளிக்கப்பட்ட ஊன்று கோல் என்ற பெயருடன் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

மரியாதை செய்த பிரதமர் : பின்னர், பின்னர் தகவல்களைத் திரட்டி அது தொடர்பாக ஒரு ஆவணத்தொகுப்பை தயார் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அது பிரதமர் அலுவலகம் வரை எட்டிய நிலையில் தான், செங்கோல் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, இன்று அந்தச் செங்கோல் நாடாளுமன்றத்தின் மையத்தை அடைந்துள்ளது.
வும்மிடி பங்காரு குடும்பத்தார் டெல்லிக்கு அழைக்கப்பட்டு அரசால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 97 வயதான வும்மிடி எத்திராஜுலுவை வணங்கி பிரதமர் மோடி ஆசி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் தங்கள் குடும்பம் தயாரித்த செங்கோல் நிறுவப்பட்டிருப்பது மிகவும் பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார் வும்மிடி பங்காரு செட்டி குடும்பத்தைச் சேர்ந்த 97 வயதான வும்மிடி எத்திராஜுலு.












Click it and Unblock the Notifications