நிதிஷ் - நாயுடு போர்க்கொடி! பாஜகவிடம் பீகார் - ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்பது ஏன்? பின்னணி
டெல்லி: மத்தியில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு துணையுடன் மோடி மீண்டும் பிரதமராக உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் பீகாருக்கும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கும் பாஜகவிடம் சிறப்பு அந்தஸ்து கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ள நிலையில் அவர்கள் 2 பேரும் ஏன் தங்களின் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கின்றனர் என்று இங்கு பார்க்கலாம்.
மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 272 தொகுதிகளில் வெல்லும் கட்சியால் மத்தியில் தனித்து ஆட்சியமைக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை சேர்த்தால் 293 எம்பிக்கள் உள்ளன. இதனால் பாஜக கூட்டணி அமைய உள்ளது.
மத்தியில் கூட்டணி ஆட்சி: இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணியில் உள் பீகார் முதல்வரும், ஜேடியூ தலைவருமான நிதிஷ் குமார், ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அனைவரும் பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நாளை பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அதன்பிறகு அவர் ஜுன் 8 ல் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் - நாயுடு கோரிக்கை: இதற்கிடையே லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தாலும் கூட தற்போது பாஜகவிடம் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவிடம் 16 எம்பிக்களும், நிதிஷ் குமாரிடம் 12 எம்பிக்களும் உள்ளனர். இதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சந்திரபாபு நாயுடு லோக்சபா சபாநாயகர் பொறுப்பு உள்பட சில முக்கிய துறையின் அமைச்சர் பதவியை கேட்கிறார். அதேபோல் நிதிஷ் குமாரும் சபாநாயகர் பதவி மீது கண்வைத்துள்ளதோடு முக்கிய இலாக்காக்களை குறிவைத்துள்ளார். இதுதவிர நிதிஷ் குமார் பீகாருக்கும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாஜக தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளது. இவர்கள் 2 பேரின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைப்பது சிரமம் என்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது இல்லாவிட்டால் அவர்களை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் அவர்கள் 2 பேரும் தங்களின் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்பது ஏன், அதன் பின்னணி என்ன என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவின் நீண்ட பிரச்சனை: அதாவது, ஆந்திராவை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பு அந்தஸ்து கேட்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா புதிய மாநிலமாக 2014ல் பிரிக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு வழங்கப்பட்டது. இது ஆந்திராவுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திராவை மேம்படுத்த சிறப்பு அந்தஸ்து வழங்க தொடர்ந்து சந்திரபாபு நாயுடுகேட்டார். கடந்த 2014 முதல் 2018 சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்தார். ஆனால் மத்தியில் ஆண்ட பிரதமர் மோடி அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு 2019ல் ஆந்திராவில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் அவர் தோற்று ஆட்சியை இழந்தார்.
தற்போது மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆந்திரா லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. இதனை பயன்படுத்தி தான் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற நினைக்கிறார். அதேவேளையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் பாஜக சிறப்பு அந்தஸ்து கொடுக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடு ‛இந்தியா' கூட்டணிக்கு மாறலாம்.இதனால் பாஜக இக்கட்டில் சிக்கி உள்ளது. அதேபோல் பீகாரின் நிதிநிலைமையை மேம்படுத்த நிதிஷ் குமாரும் சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்.
சிறப்பு அந்தஸ்து என்பது என்ன: இந்நிலையில் தான் சிறப்பு அந்தஸ்தை ஏன் பீகார், ஆந்திரா ஆகியவை பெற துடிக்கின்றன என்பது பற்றி இங்கு பார்ப்போம். அதாவது சிறப்பு அந்தஸ்து என்பது சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் நிலஅமைப்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு ஒரு அந்தஸ்தாகும். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு தான் வழங்கும்.
இந்த சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். தற்போதைய சூழலில் நம் நாட்டில் அசாம், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்துடன் உள்ளன. இதில் வடகிழக்கு மாநிலங்களில் நிலம்சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாலும், தெலுங்கானா புதிய மாநிலமாக உருவானதாலும் சிறந்து அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள.
பயன் என்ன: சிறப்பு அந்தஸ்து என்பது குறிப்பிட்ட அந்த மாநிலங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகப்படியான நிதி உதவி கிடைக்கும். மத்திய அரசின் நிதியுடவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 90 சதவீதம் வரை மத்திய அரசின் நிதி கிடைக்கும். ஆனால் சிறப்பு அந்தஸ்து இல்லாத மாநிலங்களுக்கு 65 முதல் 75 சதவீத நிதி மட்டுமே மத்திய அரசின் மூலம் கிடைக்கும்.
அதேபோல் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் ஒரு ஆண்டில் பயன்படுத்தாத நிதியை அடுத்த நிதி ஆண்டில் சேர்த்து பயன்படுத்த இயலும். அதோடு வரிச்சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக கலால், சுங்க வரி, கார்ப்பரேட் வரி, வருமான வரி உள்ளிட்டவற்றில் சலுகைகள் இருக்கும். மேலும் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டிலும் அதிகப்படியான நிதியை இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து பெறும். இதன்மூலம் அந்த மாநிலங்கள் பிற மாநிலத்தை ஒப்பிடும்போது வேகமாக வளர முடியும்.












Click it and Unblock the Notifications