இதுதான் மண்டைக்குள்ளே ஓடிட்டே இருக்கு! பாக்., ஏன் ஒரு நாள் முன்னாடி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது?
டெல்லி: இங்கிலாந்து இந்தியாவுக்கு- பாகிஸ்தானுக்கும் ஒரே நேரத்தில் அதாவது 12 மணிக்கு சுதந்திரம் வழங்கியதாக படித்திருப்போம். ஆனால் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஏன்? என கேள்வி இயற்கையாகவே எழுகிறது அல்லவா?. அதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம்..
இந்தியர்கள் மிகவும் ஆவலோடு சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. அந்த நாள் முக்கால் நூற்றாண்டுகளாக சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியா நாளை சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் ஒருநாள் முன்னதாக அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்றே பாகிஸ்தான் தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
ஒன்றாக இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்டாலும் இந்தியாவை விட பாகிஸ்தான் ஏன் ஒரு நாள் முன்னதாக சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது பலருக்கும் கேள்வியாகவே இருக்கிறது. பல போராட்டங்களுக்கு பிறகு 1947ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இந்திய சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1947ல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுயாட்சி நாடுகளாக உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகமது அலி ஜின்னாவின் வானொலி உரை மூலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடாக உருவானதாக வரலாறு சொல்கிறது. அது மட்டும் அல்லாமல் ஆகஸ்ட் 15ஆம் தேதியே முகமது அலி ஜின்னா கவர்னர் ஜெனரலாகவும், பிற அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை பதவி பிரமாணம் செய்து கொண்டதாக செய்திகளும் வெளியாகி இருக்கிறது.
ஆனால் ஏன் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பாகிஸ்தான் கொண்டாடுகிறது என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை பார்க்கலாம்.. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் அரசியலமைப்பு மன்றத்தில் அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு உரையாற்றினார். அன்று இரவு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திர நாடாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
கராச்சியில் இருந்த அவரால் உடனடியாக டெல்லி செல்ல முடியாத நிலையில் 12 மணிக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுமார் 11:30 மணி அளவில் பாகிஸ்தானுக்குக்கான அதிகாரம் இங்கிலாந்து இடமிருந்து ஒப்படைக்கப்பட்டதால் அந்த நாளிலேயே பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஐஎஸ்டி எனப்படும் இண்டர்நேசனல் ஸ்டேண்டர்ட் டைம் (IST) படி இந்தியாவில் 12 மணி எனும் போது பாகிஸ்தானில் 11.30 மணி என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கு முன்னதாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என சில பாகிஸ்தான் தலைவர்கள் கூறியதாகவும், இதை அடுத்து பாகிஸ்தான் நாட்டின் அப்போதைய பிரதமர் ஆன லியாகத் அலிகான் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அதற்கு முகமது அலி ஜின்னா ஒப்புக்கொண்டதாக இந்தியா டுடே கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அன்று முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு பச்சை பின்னணியில் நட்சத்திரக் கொடி வானில் பட்டொளி வீசி பறந்தது. அந்த நாள் அதிர்ஷ்டகரமான நாளாகப் பார்க்கப்படுவதன் காரணமாகவும், பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே சுதந்திர நாளை கொண்டாடுகிறது என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications