கழற்றிவிட்ட ராகுல், சோனியா.. ஒதுங்கிய "சீனியர்கள்".. இக்கட்டான நிலையில் காங்கிரஸ்.. என்ன நடக்கிறது?
டெல்லி: நாடு முழுக்க பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கையில்.. அதை எதிர்க்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையான உட்கட்சி மோதலில் சிக்கி தவித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஒரு குழுவாக இயங்க.. ராகுல், சோனியா ஒதுங்கிக்கொள்ள.. அடிமட்ட நிர்வாகிகள் மேலே என்ன நடக்கிறதே என்று தெரியாமல் குழம்பிப்போகும் அளவிற்கு கட்சிக்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் நடக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் என்ன பிரச்சனை என்பதை எளிதாக விளக்கி விடலாம். அந்த கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதி இருந்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தலைவராக பொறுப்பேற்க முன்வரவில்லை. இவர்கள் ஒரு பக்கம் கழன்று கொண்ட நிலையில் இன்னொரு பக்கம் சீனியர் தலைவர்கள் பலரும் தங்கள் மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வழிகாட்டு குழு தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.
மொத்தத்தில் காங்கிரஸ் தற்போது கேப்டன் இல்லாத படகு போல தள்ளாட தொடங்கி உள்ளது.

எப்போது?
காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு அறிக்கையின் படி தலைவருக்கான தேர்தல் கண்டிப்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. கண்டிப்பாக தலைவருக்கான தேர்தல் முறைப்படி நடக்கும். காங்கிரஸ் கமிட்டியின் காரிய குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்படும். ஆனால் இப்போது தலைவர் பதவிக்கு போட்டியிட போவது யார் என்பதுதான் பெரிய சிக்கலாகி உள்ளது. சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருக்கிறார்.

தயாரில்லை
ஆனால் சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை. இனியும் அவரால் கட்சியை வலுவாக வழிநடத்த முடியாது. இதை அவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கூறிவிட்டார். இன்னொரு பக்கம் நான் காங்கிரஸ் கட்சிக்காக போராடுகிறேன். களத்தில் நிற்கிறேன். பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் தலைவராக விருப்பமில்லை. ஆளை விடுங்கள் என்று ராகுல் காந்தியும் ஒதுங்கிக்கொண்டார். இதனால் இப்போது தலைவராக போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாத்திரை
செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் நாடு முழுக்க யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதை ராகுல் காந்திதான் தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாடு முழுக்க இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆனால் என்னதான் ராகுல் காந்தி இதை முன்னின்று நடத்தினாலும், தனக்கு தலைவர் பதவியில் விருப்பம் இல்லை என்று இவர் கூறிவிட்டார்.

சீனியர்கள் விலகல்
இன்னொரு பக்கம் சீனியர்களும் கட்சியின் வழிகாட்டு குழு தலைவர் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். தேர்தல் வழிகாட்டு குழு தலைவராக ஜம்மு காஷ்மீரில் இருந்து குலாம் நபி ஆசாத், இமாச்சல பிரதேசத்தில் இருந்த ஆனந்த் சர்மா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜி 23 தலைவர்கள். தங்களை கேட்காமலே கட்சி தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படுவதாக புகார் வைத்துள்ளனர். இதன் அர்த்தம் காங்கிரசில் மேல் மட்டத்தில் மட்டுமின்றி கீழ் மட்டத்திலும் கோஷ்டி மோதல் உள்ளது.

இக்கட்டான நிலை
யாருக்கு என்ன பதவி.. யார் சொல்வதை யார் கேட்பது என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையான கோஷ்டி மோதல் உள்ளது. இந்த மோதல், கருத்து வேறுபாடு, குழப்பம் அனைத்து கட்டங்களிலும் கட்சிக்கு உள்ளே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் அகில் இந்திய தலைமைக்கான தேர்தல் காங்கிரசில் நடக்க உள்ளது. ஆனால் அந்த தேர்தலில் போட்டியிட போவது யார்.. 23 வருடமாக நேரு குடும்பத்தை தவிர வேறு யாரும் காங்கிரஸ் தலைமையை வகிக்கவில்லை. இவர்கள் இல்லாத பட்சத்தில் தலைமை பதவிக்கு போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications