திருச்சி சூர்யா, பேரரசு.. பாஜகவினருக்கு விருதா வழங்கி குவிக்கிறாரே நித்தி.. என்ன காரணமா இருக்கும்?
டெல்லி: திருச்சி சிவா மகன் சூர்யா, இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பாஜகவினருக்கு நித்யானந்தா விருதாக வழங்குவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்ததால் அவர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கி அங்கு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.
அவர் பக்தர்களுக்கு இணையதளத்தில் தோன்றி சத்சங்கமும் நடத்தி வந்தார். அவர் சில மாதங்களாக இணையதளத்தில் சத்சங்க நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருந்தார். அப்போது அவர் குறித்து சில வதந்திகள் வைரலாகின.

நித்யானந்தா
அதாவது நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு மூச்சுத் திணறலால் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டிருப்பதாகவும் கை விரலில் பல்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவரே ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடிப்பதாக தெரிகிறது.

பேரரசு
இந்த நிலையில் இயக்குநர் பேரரசுவுக்கு விருது வழங்கப்படுவதாக நித்யானந்தா அறிவித்துள்ளார். இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிகளுக்காக கைலாசாவிலிருந்து கைலாசா தர்ம ரட்சகா விருது வழங்கப்படும் என நித்தி அறிவித்துள்ளார். இயக்குநர் பேரரசுவுக்கு ஆதரவாக என்றும் நானும் கைலாசாவும் இருப்போம்.

ஆன்மீக பணிகள்
அவரின் ஆன்மீக பணிகள் தொடர வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான நித்யானந்தாவின் டிவிட்டர் பதிவு வைரலாகி உள்ளது. இதே போல் ஏற்கெனவே திருச்சி எம்பி சிவாவின் மகனும் பாஜக நிர்வாகியுமான திருச்சி சூர்யாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருதை நித்யானந்தா அறிவித்திருந்தார்.

சமூகவலைதளம்
சமூகவலைதளத்தில் தொடர்ந்து இந்து மதத்திற்கு ஆதரவாக பேசி வரும் இளம் தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சி சூர்யா கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டு பேசிய போது அவர் கூறுகையில், நித்தியானந்தா சுவாமிகளின் அருளால்தான், தற்போது பாஜகவில் பணியாற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியிருந்தார்.

பாஜகவினருக்கு விருது
தொடர்ந்து பாஜகவினருக்கு நித்யானந்தா விருது வழங்கி கவுரவித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை தன் மீதான கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இப்படி செய்கிறாரா என தெரியவில்லை. ஒரு வேளை பாஜகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே தம்மால் தாயகம் திரும்பி உடல்நிலைக்கு சிகிச்சை பெற வேண்டும் என நினைக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் கைலாசா நாட்டிற்கு வணிகம் செய்ய வருமாறு அழைத்த நித்யானந்தா இந்துக்களுக்கு மட்டுமே கைலாசாவில் அனுமதி கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார். தலைவர் ரிட்டர்ன்ஸ் என பொதுமக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications